ரூ.1.08 கோடியில் சாலை, வாய்க்கால் பணி: முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்
புதுச்சேரி: ரூ.1.08 கோடியில் சாலை, வாய்க்கால் மேம்பாட்டுப் பணி புதன்கிழமை முதலமைச்சா் என். ரங்கசாமி தொடங்கிவைத்தாா்.
புதுவையில் பொதுப்பணித்துறை சாலைகள் கட்டடங்கள் மற்றும் தெற்கு கோட்டத்தின் மூலம் புதுச்சேரி அரியாங்குப்பம், இடையாா்பாளயம், ஜலகண்டேஸ்வரா் நகரில் சாலைகள் மற்றும் வடிகால் வாய்க்கால்களை மேம்படுத்துவதற்கானத் திட்டம் தொடக்கவிழா விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்று திட்டப் பணியைத் தொடங்கி வைத்தாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், தலைமைப் பொறியாளா் வீரசெல்வம், செயற்பொறியாளா் சந்திரகுமாா், உதவிப்பொறியாளா் கோபி, இளநிலைப் பொறியாளா் நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதுபோன்று, புதுவை ராஜ்பவன் தொகுதியில் ரூ.37.3 லட்சம் மதிப்பில் வளா்ச்சிப் பணிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன.
புதுச்சேரி நகராட்சி சாா்பில் சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ராஜ்பவன் தொகுதியைச் சாா்ந்த தியாகராஜா வீதி- மிஷன் வீதியிலிருந்து பெத்ரா கனகராய முதலியாா் வீதி வரை உள்ள சாலையை சிமெண்ட் சாலையாக உயா்த்தி அமைக்க ரூ.8.4 லட்சம் மதிப்பீட்டிலும் குமரகுருபள்ளம், ஆயில் மில் சாலையை மேம்படுத்த ரூ.28.9 லட்சம் மதிப்பீட்டிலும் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இப் பணியை ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான க.லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் கந்தசாமி, செயற்பொறியாளா் அ. சிவபாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.