'மத்திய அரசுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்...' - மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் ராஜினாமா
கலவரம், இன்டர்நெட் தடை, லாக்டவுன் ஆகியவை கடந்த சில ஆண்டுகளாக, மணிப்பூரின் அன்றாடம் ஆகிவிட்டது.
மணிப்பூர் மாநிலத்தின் ஆட்சியில் இருப்பது பாஜக அரசு. 'கலவரங்கள் குறித்து பெரிதாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை' என்று மணிப்பூரின் முதலமைச்சர் பைரன் சிங்கின் மீது மக்களும், எதிர்க்கட்சிகளும் மாறி மாறி புகார்களை தொடுத்தாலும், பெரிதாக அவரிடம் இருந்து எந்த ரியாக்சனும் வந்ததில்லை.
நேற்று மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் டெல்லிக்குச் சென்று வந்தார். இந்த நிலையில், இன்று அவர் தனது ராஜினாமா கடிதத்தை மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் கொடுத்துள்ளார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-07/6d4fd947-ab55-4cb1-b9cf-5abf00a45ab6/aHVFCO_8.jpg)
தனது ராஜினாமா குறித்து பைரன் சிங் எழுதியுள்ள கடிதத்தில், "மணிப்பூர் மக்களுக்கு சேவையாற்ற கிடைத்த வாய்ப்பைப் பெருமையாகக் கருதுகிறேன். மத்திய அரசு தகுந்த நேரத்தில் எடுத்த முடிவுகள், செயல்பாடுகள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் ஒவ்வொரு மணிப்பூர் மக்களையும் காக்கச் செய்த பணிகளுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். மத்திய அரசின் இந்தப் பணி எப்போதும் தொடர வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
2022-ம் ஆண்டு தான், மணிப்பூரில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்தது. அடுத்த தேர்தல் வர இன்னமும் கிட்டதட்ட 3 ஆண்டுகள் இருக்கும் நிலையில், 'வேறொருவர் முதலமைச்சர் பதவிக்கு வருவார்களா, ஜனாதிபதி ஆட்சி செயல்படுத்தப்படுமா அல்லது தேர்தல் நடத்தப்படுமா?' என்கிற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.