‘மாணவா்கள் பதின்பருவத்தில் கற்றுக்கொள்ளும் நல்லொழுக்கம் வாழ்க்கை முழுவதும் பயன் ...
மத நல்லிணக்கம் பேசிய அயோத்திக்கு தேசிய விருது தராதது ஏன்?
நடிகர் சசிகுமார் நடிப்பில் 2023-இல் வெளியான அயோத்தி படம் ஒரு தேசிய விருதுகூட பெறாதது தமிழ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கிய இந்தப் படம் தமிழில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்தில், உத்திரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் வசிக்கும் குடும்பத்தினர் ராமேஸ்வரத்திற்குச் சுற்றுலா வருவார்கள்.
தமிழ்நாட்டில் நடந்த விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழக்க, அவரது உடலை அவர்களது சொந்த ஊருக்குக் கொண்டுசெல்ல சசிகுமார் உதவுவார்.
இந்தப் படம் மத நல்லிணக்கத்துக்கு மட்டுமில்லாமல் மனிதம் பற்றி பேசிய முக்கியமான படமாகவும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.
71-ஆவது தேசிய விருது நேற்று (ஆக.1) மாலை அறிவிக்கப்பட்ட நிலையில், அயோத்தி படத்துக்கு எந்த விருதுமே அறிவிக்கவில்லை என்பது அதிர்ச்சியாக இருந்தது.
பிரிவினையை உண்டாக்கும் விதமாக எடுக்கப்பட்ட கேரள ஃபைல்ஸ் படத்துக்கு விருது அளித்தது சமூக வலைதளத்தில் மிகுந்த பேசுபொருளாகியுள்ளது.
கேரள முதல்வரும் இந்த விருதுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
அயோத்தி படத்துக்குப் பிறகு இறந்தவர்களை விமானத்தில் கொண்டுசெல்ல நடைமுறைகள் எளிதானதாக மாறியுள்ளதாகவும் அதனால் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்ததாக தன்னிடம் ஒருவர் கூறியதாக சசிகுமார் சமீபத்தில் நெகிழ்ச்சியாகத் தெரிவித்திருந்தார். (இதுவே பல தேசிய விருதுகளுக்கு சமம்தானே!)
அயோத்திக்கு தவறியது டூரிஸ்ட் ஃபேமலி படத்துக்காவது கிடைக்குமா தெரியவில்லை. ஒற்றுமையைப் பேசினால் கிடைக்காது என ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தைப் பகிர்ந்து வருகிறார்கள்.
தேசிய விருதுகளுக்கு மரியாதை என்பது சமூகத்தில் நல்ல மாற்றங்களை உண்டாக்கும் படங்களுக்குதான் இருக்கவேண்டுமே தவிர, பிரிவினையை உண்டாக்கும் படங்களுக்குக் கூடாதென பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.