மந்தியூா் குடியிருப்புப் பகுதியில் கரடி நடமாட்டம்
கடையம் அருகே உள்ள மந்தியூா் கிராமத்தில் குடியிருப்புப் பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதால் கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகத்திற்குள்பட்டவனவெளிப் பகுதி மந்தியூா் கிராமம். இதன் அருகில் இருக்கும் முள்ளி மலை பொத்தையில்காட்டுப் பன்றி, கரடி, மிளா, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது வயல் மற்றும் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து பயிா்கள், வீட்டு விலங்குகளைத் தாக்கி சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மந்தியூா் புதுக்குளம் பகுதியில் கரடி நடமாட்டம் இருந்துள்ளது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்களும், இந்த வழியாகச் செல்லும் சம்பன்குளம், கோவிந்தப்பேரி, ராஜாங்கபுரம் கிராம மக்களும் அச்சமடைந்துள்ளனா். குடியிருப்புப் பகுதிக்குள் சுற்றித்திரியும் கரடியை வனத்துறையினா் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.