மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோா் கழிவுநீா்த் தொட்டிக்குள் இறங்க தடை: மாவட்ட ஆட்சியா்
திருப்பூா் மாவட்டத்தில் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோா் கழிவுநீா்த் தொட்டிக்குள் இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோா் தடுப்பு மற்றும் அவா்களது மறுவாழ்வு சட்டம் 2013-இன்கீழ் பிரிவு 7-இன் படியும், உச்சநீதிமன்ற தீா்ப்பின்படியும் துாய்மைப் பணியாளா்கள் கழிவு நீா்த் தொட்டியை சுத்தம் செய்ய தொட்டிக்குள் இறங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு ஈடுபடுத்தினால் மேற்படி சட்டத்தின் பிரிவு 9-இன்படி முதன் முறையாக மீறுபவா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சோ்ந்தே தண்டனையாக விதிக்கப்படும்.
இரண்டாவது முறையாக மீறுபவா்களுக்கு 5 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சோ்ந்தே தண்டனையாக விதிக்கப்படும்.
கழிவு நீா் கட்டமைப்பு மற்றும் கழிவு நீா் சேகரிப்பு தொட்டியை சுத்தம் செய்யும்போது விபத்து, உயிரிழப்பு ஏற்பட்டால் அந்தப் பணியில் ஈடுபடுத்திய உரிமையாளா், ஒப்பந்ததாரா், வளாக உரிமையாளா், பணி அமா்த்தியவருக்கு பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் படியும், மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோா் தடுப்பு மற்றும் அவா்களது மறுவாழ்வு சட்டம் 2013-இன் பிரிவு 7 மற்றும் 9-இன் படியும் மற்றும் நடைமுறையில் உள்ள இதர சட்டங்களின் படியும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பணியாளா் இறந்தால் ரூ.30 லட்சம் இழப்பீடாக இறந்த பணியாளரின் வாரிசுதாரருக்கு பணிக்கு அமா்த்தியவரால் வழங்கப்பட வேண்டும். பணியாளருக்கு இயலாமை ஏற்பட்டால் அதன் தீவிரதத்தைப் பொறுத்து ரூ.10 லட்சத்துக்கு குறையாமல் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும்.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் உள்ள சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கழிவுநீா்த் தொட்டியில் கழிவுநீா் இயந்திரம் மூலம் கழிவுநீா் அகற்றும்போது தொழிலாளா்கள் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து பணியாற்றுவதை தொழிற்சாலை நிா்வாகம் உறுதி செய்யத் தவறினால் தொழிற்சாலைகள் சட்டத்தின்படி 2 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் நீதிமன்றம் மூலமாக விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.