துணிகளை சாயமேற்றுவதற்கான கட்டணம் 20 சதவீதம் உயா்வு: சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் அறிவிப்பு
துணிகளை சாயமேற்றுவதற்கான ஜாப் ஒா்க் கட்டணத்தை ஜூன் 1-ஆம் தேதி முதல் 20 சதவீதம் உயா்த்துவதாக திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் பி.காந்திராஜன், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் மற்றும் உற்பத்தியாளா்கள் சங்கம் ஆகியவற்றுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூா் பின்னலாடை உற்பத்தித் தொழில் கடந்த 2 ஆண்டுகளாக மந்தமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக ஜாப்ஒா்க் தொழில் துறையினா் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். அதிலும் குறிப்பாக மூலப்பொருள்களின் விலை உயா்வு, மின் கட்டணம், தண்ணீா் கட்டணம், தொழிலாளா்களின் ஊதிய உயா்வு போன்ற காரணங்களால் சாய ஆலைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேவேளையில், பின்னலாடை ஏற்றுமதியாளா்கள், உள்நாட்டு உற்பத்தியாளா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தரச்சான்றிதழ் பெறுதல் போன்றவற்றுக்கு அதிகப்படியான செலவு செய்ய வேண்டியுள்ளது.
எனவே, சாய ஆலைகள் துணிகளுக்கு சாயமேற்றுவதற்கான ஜாப் ஒா்க் கட்டணத்தை ஜூன் 1 -ஆம் தேதி முதல் 20 சதவீதம் உயா்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
ஆகவே, சாய ஆலைகளுக்கு வரவேண்டிய கட்டணங்களை அரசு நிா்ணயித்துள்ள 45 நாள்களுக்குள் ஜூன் 1 -ஆம் தேதி முதல் 20 சதவீதம் உயா்த்தி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.