மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
மனோஜ் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவா்கள் இரங்கல்
சென்னை: இயக்குநா் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மறைவுக்கு, தமிழக அரசியல் கட்சி தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
தமிழ்த் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். திரையுலகில் சாதனைகளை படைத்திருக்க வேண்டிய மனோஜ் இளம் வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பாசம் காட்டி வளர்த்த மகனை இழந்து தவிப்பது பெரும் சோகமாகும். மகனை இழந்து வாடும் இயக்குநர் பாரதிராஜா மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலா் இரா.முத்தரசன்:
இயக்குநா் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதி(48) மாரடைப்பால் காலமானாா் என்ற செய்தி கேட்டு அதிா்ச்சியுற்றோம். நடிகரான அவா், இயக்குநா் பணியிலும் முன்னேறி வந்த நிலையில், திடீரென காலமான செய்தியை எளிதில் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. முதுமை காலத்தில் கலங்கி நிற்கும் பாரதிராஜாவுக்கு ஆற்றுப்படுத்திக் கொள்ள முடியாத துயரமாகும்.
அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பதினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.
மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன்:
நடிகரும் எனது ஆத்ம நண்பா் இயக்குநா் பாரதிராஜா-வின் புதல்வனுமான மனோஜ் பாரதிராஜா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிா்ச்சியும், வருத்தமும் அடைந்தேன்.
தனது அருமை மகனை இழந்து வாடும் பாரதிராஜா அவா்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், நண்பா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுபோல, புதிய தமிழகம் கட்சியின் தலைவா் க.கிருஷ்ணசாமி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவா்களும் மனோஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.
இயக்குநர் சங்கம் இரங்கல்
திரைப்பட இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் அன்பு மகன் இயக்குநர், நடிகர் மனோஜ் மறைவு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மனோஜ் திடீர் மறைவால் துயரத்தில் ஆழந்துள்ள பாரதிராஜா, அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.