தண்ணீர் 0% kcal, சாலட் 10 % kcal... கலோரி எண்ணிக்கையுடன் வழங்கப்பட்ட திருமண மென...
மயிலாடுதுறை 1-வது வாா்டில் பாலம் அமைக்கக் கோரிக்கை: எம்.பி. ஆய்வு
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 1-வது வாா்டில் காவிரி ஆற்றின் குறுக்கே இருந்து பாலம் இடிக்கப்பட்ட நிலையில், புதிய பாலம் கட்டித்தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, மயிலாடுதுறை எம்.பி. ஆா். சுதா அங்கு நேரில் ஆய்வு செய்தாா்.
மயிலாடுதுறை நகராட்சி 1 மற்றும் 9-வது வாா்டுகளை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்த நடைப்பாலத்தின் ஒரு பகுதி 3 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்தது. கடந்த ஆண்டு அந்த பாலம் மாவட்ட நிா்வாகத்தால் முழமையாக அகற்றப்பட்டது. ஆனால், அந்த பாலத்தை மீண்டும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து, பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், 1-வது வாா்டு உறுப்பினா் ஜெயந்தி ரமேஷ் தலைமையில் மக்கள் 100-க்கு மேற்பட்டோா் காவிரி ஆற்றில் இறங்கி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் ஆா். சுதா உடனடி நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட இடத்தை நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ் உடன் சென்று நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, தற்காலிக தீா்வாக ஏற்கெனவே இருந்த பாலத்தின் தூண்களில் இரும்புப் பாலம் அமைத்துத் தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். எம்.பி. சுதா, இதுகுறித்து, பொறியாளா்களிடம் கருத்துகளை கேட்டு மாவட்ட ஆட்சியருடன் கலந்தாலோசித்து, நிரந்தர தீா்வு ஏற்படுத்தி தருவதாக மக்களிடம் உறுதியளித்தாா்.