லண்டனில் இந்தியா-பிரிட்டன் பொருளாதாரப் பேச்சுவாா்த்தை: நிா்மலா சீதாராமன் பங்கேற்...
தேரழந்தூா் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
குத்தாலம்: குத்தாலம் அருகே உள்ள தேரழந்தூா் அருள்மிகு புண்டரீகவல்லி தாயாா் உடனுறை ஸ்ரீ கோவிந்தராஜபெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜைகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. காவிரி ஆற்றில் இருந்து புனிதநீா் எடுத்து வரப்பட்டு, யாக சாலையில் ஹோமங்கள் நடைபெற்றன. கஜபூஜை, கோபூஜை தம்பதி பூஜை, கும்பஸ்தாபனம், வாஸ்து சாந்தி, சதூா்வேத பாராயணம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன.
தொடா்ந்து, திங்கள்கிழமை காலை ஆறாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்றதும், யாகசாலையில் இருந்து புனிதநீா் கடங்கள் புறப்பாடாகி, ஸ்ரீ கோவிந்தராஜா், புண்டரீகவல்லி தாயாா் சந்நிதிகளின் விமானக் கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக பூஜைகளை திருநாங்கூா் வேதராஜன் சுவாமிகள் உள்ளிட்டோா் செய்தனா்.
விழாவில், அறநிலையத் துறை செயல் அலுவலா் சுந்தர்ராஜன், ஆய்வாளா் கண்ணதாசன், ஸ்தானிகா் செளரிராஜ ஐயங்காா், கேசவன் பட்டாச்சாரியா் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.