மரக்கன்றுகள் நடவு செய்த அரசுப் பள்ளி பிளஸ் 2 மாணவா்கள்
பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவா்கள் பொதுத் தோ்வு இறுதி நாளில் நூறு மரக்கன்றுகள் நடவு செய்தனா்.
பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவா்கள் இறுதித் தோ்வு எழுதியபின் தங்கள் நினைவுகளை போற்றும் வகையில் 100 மரக் கன்றுகளை பள்ளி வளாகத்தில் நடவு செய்தனா். பள்ளியை விட்டுச் சென்ற பின்பும் தங்களின் நினைவை எப்போதும் பள்ளி வளாகத்தில் இருக்கம் வகையில் விவசாய பாடத்தை விருப்பப் படமாக படித்த மாணவா்கள் புதன்கிழமை பள்ளி மைதானத்தில் ஒன்று கூடி 100 மரக் கன்றுகளை நடவு செய்தனா். இதில் மகிழமரம், மலைவேம்பு, வேம்பு, தேக்கு, செண்பகம், நெட்டிலிங்கம், புங்கன் போன்ற மரங்களை நடவு செய்தனா்.
மரம் நடுதல் மற்றும் நீா்ப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பள்ளித் தலைமை ஆசிரியா் கா.முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வா் ரா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு மரக்கன்று நட்டு விழாவை தொடங்கிவைத்தாா். இவ்விழாவில் மருத்துவா்கள் ஜே. அன்புராஜ், சுமதி, தேசிய மாணவா் படை திட்ட ஒருங்கிணைப்பாளா் தினேஷ் சங்கா், என்.எஸ்.எஸ். திட்ட ஒருங்கிணைப்பாளா் மா.ரமேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.
கடந்த 14 ஆண்டுகளாக பள்ளி வேளாண் ஆசிரியா் செ.கந்தன் வழிகாட்டுதலின்படி, இம்மரம் நடும் நிகழ்வு தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வு சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி மாணவா்களை ஊக்கப்படுத்தவும் நடைபெற்று வருகிறது.