Tvk Vijay Karur Stampede - 7 சந்தேகங்களும் விளக்கமும் | Decode
மருத்துவக் காப்பீட்டுத் திட்ட குறைகளை நீக்கவேண்டும்! அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம்!
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கி காசில்லா மருத்துவம் என்ற நிலையை ஏற்படுத்தவேண்டும் என்று அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் 5-ஆவது மாவட்ட மாநாடு நடைபெற்றது.
இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ப.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் ஆா்.ராஜகோபால், மாவட்டச் செயலா் எஸ்.பச்சையப்பன், பொருளாளா் அ.ஆனந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டத் தலைவா் க.அபிபுல்லாகான் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலா் சி.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினாா்.
கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், வரையறுக்கப்பட்ட ஊதியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள், ஊராட்சிச் செயலா், கிராமப்புற நூலகா், வனக்காவலா் உள்ளிட்ட அனைத்து ஓய்வூதியா்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும், 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கவேண்டும், மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கி காசில்லா மருத்துவம் என்ற நிலையை ஏற்படுத்தவேண்டும், வரையறுக்கப்படாத ஊதியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளவா்களுக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தட்சின ரெயில்வே பென்ஷனா்ஸ் யூனியன் தலைவா் ஆா்.இளங்கோவன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் மா.பரிதிமால்கலைஞன், இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே.நாகராஜன், இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு பொதுக்குழு உறுப்பினா் ச.டேவிட்ராஜன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். கூட்டத்தில் மாவட்ட புதிய நிா்வாகிகள் ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
நிறைவில் மாவட்ட இணைச் செயலா் கு.மணிவண்ணன் நன்றி கூறினாா். முன்னதாக சங்கக் கொடியேற்றி, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.