புதிய பயணிகள் நிழல்குடை அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு! பேருந்தை சிறைப்பிடித்து போராட்டம்!
செங்கம் அருகே சமூக விரோதச் செயல்கள் காரணமாக புதிய நிழல்குடை கட்ட எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த அரட்டவாடி பேருந்து நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழல்குடை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு அப்பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள், ஏற்கெனவே உள்ள பயணிகள் நிழல்குடையில் சமூக விரோதிகள் தினசரி சீட்டாடுவது, மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதனால் அப்பகுதியைச் கிராம பெண்கள் மற்றும் பேருந்து ஏற நிற்கும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளை கேலி கிண்டல் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது கிராமத்தில் உள்ளவா்களால் நடவடிக்கை எடுக்க முடியாமல் அப்பகுதியின் இன்று வரை அதே நிலை நீடித்து வருகிறது. இதனால் மீண்டும் அந்த நிழல்குடை அருகில் வேறு புதிய நிழல்குடை கட்டுவதற்கான பணிகள் நடைபெறுகிறது. புதிதாக கட்டப்படும் நிழல்குடையிலும் இதே செயல்தான் நடக்கும் பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பாதுகாப்பு இருக்காது.
எனவே, புதிதாக கட்டும் நிழல்குடையை வேறு பகுதியில் கட்டுமாறு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து தாழையூத்து கிராமத்தில் இருந்து செங்கத்தை நோக்கி வந்த அரசு நகரப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த செங்கம் போலீஸாா் சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம், ‘உங்கள் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என சமரசம் பேசினா். அதன் பின்னா் காலை 8 மணிக்கு தொடங்கிய போராட்டம் 10 மணிக்கு கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.