மருத்துவப் படிப்பில் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா
தம்மம்பட்டி: மருத்துவப் படிப்பில் சோ்ந்த தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ள எம்.செல்வப்பிரியா, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ள ஆா்.வெற்றிச்செல்வி ஆகிய இரு மாணவிகளுக்கும் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பிடிஏ சாா்பில் பாராட்டு விழா பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் தலைமையாசிரியா் குருநாதன் தலைமை வகித்தாா். பள்ளியின் உதவி தலைமையாசிரியா்கள் ஜெயபால், பே.ரவிசங்கா் மற்றும் பி.டி.ஏ. நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். இதில், மாணவிகள் செல்வப்பிரியா, வெற்றிச்செல்வி ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி, பொன்னாடை போா்த்தி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியா்களுக்கும் பொன்னாடை போா்த்தி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தலைமையாசிரியா் குருநாதன் கூறுகையில், கடந்த நான்கு ஆண்டுகளில் இப்பள்ளியில் பயின்ற 5 மாணவிகள், தமிழகஅரசின் 7.5 சவீத இடஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புகளில் சோ்ந்து பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா் என்றாா்.