Bison: ``நீங்க ஏன் இந்த மாதிரி படம் எடுக்குறீங்க? - இது அபத்தமான கேள்வி" - மேடைய...
மலர்களைத் தாக்கும் கொம்பன் ஈ அளவோ சிறியது; பாதிப்போ பெரியது நஷ்டம் தவிர்க்க, இயற்கை வழி தீர்வுகள்!
கொய் மலர்கள் சாகுபடியில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன. உதிரி மலர்கள் சாகுபடியில் மதுரை முதலிடத்திலும், அதற்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன. பொதுவாக, மலர் சாகுபடியைப் பொறுத்தவரையில் சாறு உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈ, அசுவினி, இலைப்பேன், செம்பேன் சிலந்தி, மாவுப்பூச்சி ஆகியவற்றின் தாக்குதல்களை எதிர்கொள்வது மலர் விவசாயிகளுக்குப் பெரும் சவாலாக உள்ளது.
மல்லிகை…
குறிப்பாக, மல்லிகை சாகுபடியைப் பொறுத்தவரை இலைகளில் சேதம் ஏற்படுத்தக்கூடிய இலைத்துளைப்பான், பூக்கள் மற்றும் இலைகளைச் சாப்பிடக்கூடிய புழுக்கள் ஆகியவற்றால் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. சில இடங்களில் படைப்புழுத் தாக்குதலாலும் மல்லிகை விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். லில்லி, கிளாடியோலஸ் ஆகிய மலர்கள் சாகுபடியில் விதைகளைச் சாப்பிடும் செம்பேன் சிலந்தி முக்கியப் பிரச்னையாக உள்ளது.
மொட்டுத் துளைப்பான்
தென் மாவட்டங்களில் மல்லிகை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் எவ்வளவு பூச்சிக்கொல்லி தெளிக்கிறார்கள் என ஓர் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. மொட்டுத் துளைப்பான் தாக்குதலால் சுமார் 100 சதவிகிதம் மகசூல் இழப்பு ஏற்படுவதால், அதைக் கட்டுப்படுத்த, தொடர்ச்சியாக அதிக அளவில் பூச்சிக்கொல்லி தெளிக்கிறார்கள் எனக் கண்டறியப்பட்டது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நிகழ்த்தப்பட்ட ஓர் ஆய்வில், மலர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளில் 78 சதவிகிதம் பேர், பூச்சிக்கொல்லிகளை மட்டுமே முழுமையாக நம்பி இருக்கிறார்கள் எனவும், மீதமுள்ள 22 சதவிகிதம் பேர் பஞ்சகவ்யா, வேப்பங்கொட்டை கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டி உள்ளிட்ட இயற்கை இடுபொருள்கள் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, மலர் சாகுபடியில் பூச்சிக் கொல்லி பயன்படுத்தக்கூடிய விவசாயிகளில் 42 சதவிகிதம் பேர், உரக்கடைக்காரர்கள் பரிந்துரை செய்யும் பூச்சிக்கொல்லிகளையே வாங்குகிறார்கள். 46 சதவிகிதம் விவசாயிகள், தொலைக்காட்சிகளில் வெளியாகும் விளம்பரங்கள் மூலமாகப் புதிய வகை பூச்சிக்கொல்லி மற்றும் ஏற்கெனவே பிரபலமாக உள்ள பூச்சிக்கொல்லிகளை வாங்குகிறார்கள். மற்றவர்கள், அச்சு ஊடகங்கள் மற்றும் பண்பலை விளம்பரங்கள் மூலமாகவும் பூச்சிக்கொல்லிகள் குறித்து அறிந்துகொண்டு, அவற்றை வாங்கிப் பயன்படுத்துவதாகத் தெரிய வந்துள்ளது. விவசாயிகள் தங்களுடைய பயிர்களுக்கு எப்போது, எவ்வளவு பூச்சிக்கொல்லி பயன்படுத்த வேண்டும் என்பதை உரக்கடைகள் மற்றும் ஊடக விளம்பரங்கள்தான் தீர்மானிக்கின்றன. வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறையில் பணியாற்றும் கள அலுவலர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது அவசியம்.
இலைப்பேன்
மலர் செடிகளைத் தாக்கக்கூடிய இலைப்பேன்கள் இலைகளின் நடு நரம்பில் உள்ள சாற்றையும், பூக்களில் உள்ள சாற்றையும் உறிஞ்சி எடுப்பதால், அவை காய்ந்து போகும். இதனால், இலைகளிலும் பூக்களிலும் ஆங்காங்கே வெள்ளை நிறத்தில் பட்டை போன்ற கோடுகள் தோன்றும். இலைகள் மேல்நோக்கிச் சுருள ஆரம்பிக்கும்.

நூலாம்படை (சிலந்தி வலை)...
இரண்டு புள்ளிகள் கொண்ட செம்பேன் சிலந்திகள், இலைகளுக்குப் பின்புறம் நூலாம்படை போன்ற வடிவமைப்பை ஏற்படுத்தி, உள்ளே சென்று அமர்ந்து கொள்ளும். எந்த மாதிரியான பூச்சிக்கொல்லிகளைத் தெளித்தாலும் நூலாம்படையில்தான் படும் (இந்தப் பூச்சிகள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யும். இவை, இலையின் பின்புறம் உள்ள சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் பாதிக்கப்படும். இதனால் செடியின் வளர்ச்சி குன்றி பூக்கள் உருவாவதிலும் பாதிப்பு ஏற்படும்).
தக்காளிச் செடிகளைத் தாக்கும் 12 வகையான பூச்சி இனங்கள் குறித்தும், இயற்கை முறையில் அவற்றை எளிதாகக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும், கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். அதிக ஏற்றுமதி வாய்ப்புள்ள விளைபொருளான மலர் சாகுபடியில் ஏற்படும் பூச்சித்தாக்குதல் குறித்துத் தற்போது பார்ப்போம்.
மலர் சாகுபடியில், உலக அளவில் நெதர்லாந்து முதலிடத்தில் உள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவும் மலர் உற்பத்தியில் முக்கியப் பங்களிப்புச் செய்கிறது. இங்கிருந்து உலகின் பல நாடுகளுக்கு மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பல வகையான மலர்கள் இந்தியாவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. மலர் சாகுபடியில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மலர்கள்… மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ரோஜா, செவ்வந்தி, லில்லியம், கார்னேஷன், ஜெர்பரா, கிரிஸான்தமம் உள்ளிட்ட கொய் மலர்கள், பூங்கொத்துகள் தயாரிப்பதற்கும், மேடை மற்றும் நுழைவு வாயில் அலங்காரம் செய்வதற்கும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. மல்லிகை, ஜாதிமல்லி, சம்பங்கி, சாமந்தி, அரளி உள்ளிட்ட உதிரி மலர்கள், மாலைகள் கட்டுவதற்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
சாமந்திப்பூ…
சாமந்திப்பூ செடிகளில் அசுவினி, தத்துப்பூச்சி, செம்பேன் சிலந்தி, இலைப்பேன், புழுக்கள், இலைத்துளைப்பான், மாவுப்பூச்சி ஆகியவை தாக்குகின்றன. ஜெர்பரா செடிகளில் வெள்ளை ஈ, இலைத்துளைப்பான், இலைப்பேன், அசுவினி, செம்பேன் சிலந்தி ஆகியவற்றின் தாக்குதல் ஏற்படுகிறது.
செவ்வந்தி…
செவ்வந்திப்பூ செடிகளில் அசுவினி, இலைத் துளைப்பான், செம்பேன் சிலந்தி, மஞ்சள் சிலந்தி ஆகிய பூச்சி இனங்களால் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
ரோஜா…
ரோஜா செடிகள்… செதில் பூச்சி, இலைப்பேன், அசுவினி, வெள்ளை ஈக்கள் ஆகியவற்றின் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன. இலைப்பேன்களை எதிர்த்து வளரும் திறன், ரோஜா செடிகளுக்குக் குறைவு. இலைப்பேன்கள் மற்றும் செதில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, தண்ணீரில்… 10% புங்கன் எண்ணெய் அல்லது 1% வேப்ப எண்ணெய் அல்லது 5% வேப்பங்கொட்டை கரைசல் கலந்து தெளிக்கலாம். இலையைச் சாப்பிடக்கூடிய பச்சைநிற வெட்டுக் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த என்.பி வைரஸ் (N.P Virus) பயன்படுத்துவது அவசியம்.

மல்லிகை, சம்பங்கி...
மல்லிகைச் செடிகளில் மொட்டுத் துளைப்பான், வெள்ளை ஈ, இலைப் பிணைப்புப் புழு ஆகியவை தாக்குதல் நடத்துகின்றன. சம்பங்கி சாகுபடியைப் பொறுத்தவரை… அசுவினி, மாவுப்பூச்சி, செம்பேன் சிலந்தி, இலைப்பேன், பூவைத் தின்னும் புழுக்கள், நூற்புழுக்கள் ஆகியவற்றால் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
பூச்சிக்கொல்லி, தெளிக்கப்படாத அரளி...
அரளிச் செடிகளில் பெரும்பாலும் பூச்சித்தாக்குதல் ஏற்படுவதில்லை. சில நேரங்களில் இலையைச் சாப்பிடும் புழுக்கள் வந்தாலும்கூட, பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்து வதில்லை. விவசாயிகள், பூச்சிக்கொல்லி தெளிக்காத ஒரே மலர் சாகுபடியாக அரளி உள்ளது.
கோடை உழவு
பொதுவாக, மலர் சாகுபடியில் ஏற்படும் பூச்சித்தாக்குதல்களைக் கட்டுப்படுத்த கோடை உழவு செய்வது அவசியம். இதனால், மண்ணில் உள்ள பூச்சிகளின் வளர்ச்சி நிலைகள் பாதிப்படைவதால், அடுத்த பருவத்தில் சாகுபடி செய்யும் பயிர்களை, பூச்சித் தாக்குதல்களிலிருந்து பெருமளவு கட்டுப்படுத்தலாம்.
மொட்டு ஈ
மல்லிகையைத் தாக்கும் பூச்சி இனங்களில் மொட்டுத்துளைப்பான் மற்றும் கொம்பன் ஈ ஆகிய இரண்டும் விவசாயிகளிடம் மிகப் பெரிய அச்சத்தை உருவாக்குகின்றன. மல்லிகைச் செடியில் முன்பெல்லாம் மொட்டுப் புழுக்கள் தாக்குதல் இருக்கும். இது அந்துப்பூச்சி குடும்பத்தைச் சேர்ந்தது. மல்லிகைப்பூ விளைச்சலை இந்தப் புழுக்கள் தான் அதிகம் பாதித்தன. ஆனால், சமீப ஆண்டுகளில் ‘மொட்டுகளைத் தாக்கும் கொம்பன் ஈக்களால் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன’ என்கிறார்கள் விவசாயிகள்.

ஈக்கள் குடும்பத்தைச் சேர்ந்த இவை தாக்கினால்... மல்லிகைப் பூக்கள், புளியம்பூ நிறத்துக்கு மாறிவிடும். இதனால், பூக்களின் இயல்பான மணம் பாதிக்கப்படும். வணிக ரீதியாகவும் இதனால் பெரும் பின்னடைவு ஏற்படுகிறது. இளம் மொட்டுகளை இவை அதிகம் தாக்குவதால் மகசூல் இழப்பும் அதிகமாக ஏற்படுகிறது.
கொம்பன் ஈக்கள்...
கொசுக்களைவிடச் சிறிய அளவில் இருக்கும் கொம்பன் ஈக்கள், மல்லிகைப் பூவின் காம்புகளில்தான் முட்டையிடும். இந்த முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் மல்லிகைப் பூக்களின் இதழ்களைத் தின்றுவிடும். அதன்பிறகு, கூட்டுப்புழுவாக மாறும் தறுவாயில் துள்ளிக்குதித்து மண்ணில் விழுந்துவிடும். மண்ணில் கூட்டுப்புழுவாக மாறி, அதிலிருந்து ஈக்கள் உருவாகின்றன. கொம்பன் ஈக்களின் வாழ்க்கை சுழற்சி இவ்வாறாகத்தான் இருக்கிறது.
இப்பூச்சிகள்… முட்டைப் பருவத்தில் 2 நாள்கள், புழுப் பருவத்தில் 7 நாள்கள், கூட்டுப்புழு பருவத்தில் 7 நாள்கள் என, மொத்த 16 நாள்களில் ஈக்களாக உருவாகின்றன. இவை, பூவின் காம்பில் முட்டைகள் இடும். அவற்றிலிருந்து வெளிவரும் புழுக்கள், மொட்டுகளுக்குள் சென்றுவிடுவதால், விவசாயிகள் என்னதான் மருந்து அடித்தாலும் பாதிப்பைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. இந்த ஈக்கள், மல்லிகைச் செடியின் வெளிச்சுற்று கிளைகளில் உள்ள பூக்களில் தான் முட்டையிடும். இதனால், எளிதில் மண்ணில் விழுந்து கூட்டுப்புழுக்களாக மாறுகின்றன.

கவாத்து அவசியம்...
விவசாயிகள், கொம்பன் ஈக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் எனில், முதலில் முட்டையைத்தான் அழிக்க வேண்டும் அல்லது கூட்டுப்புழுவாக மாற மண்ணில் விழும்போது அழிக்க வேண்டும். பூந்தோட்டத்தைத் தூய்மையாகப் பராமரிப்பதுதான் தீர்வுக்கான முதல் வழி. செடிகளைச் சீராகக் கவாத்துச் செய்வதும் மிக அவசியம். விளக்குப் பொறிகள் மூலமாகவும் தாய்ப் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்துக் கட்டுப் படுத்தலாம்.
தண்ணீரைத் தேக்கி வைக்கக் கூடாது...
தோட்டத்தில் பூக்களைப் பறிக்கும்போது, தரமான பூக்களுடன் புளியம் பூ போல நிறம் மாறியிருக்கும் பூக்களையும் சேர்த்துப் பறித்து விடுகிறார்கள். பிறகு, தரமற்ற பூக்களைப் பிரித்து எடுத்து தோட்டத்துக்குள்ளேயே போட்டு விடுகிறார்கள். இது ஈக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வழிவகுக்கும். ஈக்களால் பாதிக்கப்பட்ட பூக்களைத் தனியாகப் பறித்து, எரித்து விட வேண்டும். தூரைத் தவிர்த்து செடியின் ஓரப்பகுதிகளைச் சேறும், சகதியுமாக வைத்திருப்பதன் மூலம் கூட்டுப்புழுவாக மாறுவதைத் தடுக்கலாம். இதற்காகத் தோட்டத்தில் தண்ணீரைத் தேக்கி வைத்துவிடவும் கூடாது.
வேப்பங்கொட்டையை அரைத்துப் பொடியாக்கி, செடியைச் சுற்றிலும் ஓரப்பகுதியில் போட்டு வைக்க வேண்டும். பூப்பறித்தவுடன் செடிகளை நன்றாக ஆட்டிவிட்டால் செடியின் கீழுள்ள வேப்பங்கொட்டை பொடி மீது கூட்டுப்புழுக்கள் விழுந்து அழியும். செடியின் தூர்ப்பகுதியில் பொடியைப் போடக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

குளவிகளை வயலுக்கு ஈர்த்து வரும் மஞ்சள் நிறப் பூச்செடிகளை மல்லிகைப் பூந்தோட்டத்தின் வரப்பு ஓரங்களிலும், மையப் பகுதிகளிலும் வளர்க்கலாம். இதன்மூலம், மொட்டுகளைத் தாக்கும் கொம்பன் ஈக்களைக் கட்டுப்படுத்த முடியும். விவசாயிகள், ரசாயன பூச்சிக்கொல்லிகள் தெளித்து, பணத்தை வீணாக்க வேண்டாம். இவ்வாறு, இயற்கை முறையில் எளிதாகவும் செலவின்றியும் கொம்பன் ஈக்களைக் கட்டுப்படுத்தி, மல்லிகை மொட்டுகளைப் பாதுகாக்கலாம்.
- பறக்கும்
பசுமைக்குடில்...
பசுமைக் குடில்களில் நடைபெறும் மலர் சாகுபடியில், இயற்கை முறையிலான பூச்சிக் கட்டுப்பாடு மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது. சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் பசுமைக் குடில் விவசாயிகள் பெரும் பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள். இதைக் கட்டுப்படுத்த ஒட்டுப்பொறிகள் மற்றும் உயிர் பூஞ்சண பூச்சிக்கொல்லிகளான ‘பவேரியா பேசியானா (Beauveria bassiana)’ மற்றும் ‘வெர்ட்டிசீலியம் லக்கானி’ (Verticillium Lecanii) இரண்டையும் தெளிப்பது அவசியம்.

செம்பேன் சிலந்தி
செம்பேன் சிலந்திகளின் தாக்குதலால் இலைகளின் மேற்பரப்பில் வெள்ளை நிறப் புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கும். குறிப்பாக, இந்தப் பூச்சிகள் நூலாம்படை வடிவமைப்பின் உள்ளே இருப்பதால் காற்று வீசும்போது, இந்தப் பூச்சிகள், ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்குப் பரவி இலைகளில் தாக்குதல் நடத்தும்.

இதைத் தவிர்க்க வேண்டும்...
சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி மற்றும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளையும், இலைப்பேன்களைக் கட்டுப்படுத்த ஊதா நிற ஒட்டுப்பொறிகளையும் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும். செம்பேன் சிலந்திகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால்… ஒரே நிலத்தில் தொடர்ச்சியாக மலர் சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும். அசுவினி தாக்குதல் ஏற்பட்டால், மலர்ச் செடிகள் வாட ஆரம்பித்து, வளர்ச்சி குன்றிவிடும். இதனால், பூக்கள் உருவாவது தடைபடும்.
ஒட்டுப்பொறிகள்...
மலர் தோட்டங்களில் மஞ்சள் நிற ஒட்டுப்பொறி, ஊதா நிற ஒட்டுப்பொறி, விளக்குப்பொறி, என்.பி வைரஸ் ஆகிய அனைத்தையும் பயன் படுத்துவதன் மூலம், பூச்சித் தாக்குதல்களைப் பெருமளவு கட்டுப்படுத்தலாம். இலை மஞ்சளாக மாறுவது மலர் சாகுபடியில் முக்கியமான பிரச்னையாகக் கருதப்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடு, வேர் அழுகல், வேர்ப்புழுத் தாக்குதல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்று அதற்குக் காரணமாக இருக்கலாம். இதில் சரியான காரணத்தைக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

செதில் பூச்சி...
செதில் பூச்சித்தாக்குதலால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த, நோய் தாக்கிய கிளைகளை அகற்றி எரித்துவிட வேண்டும். செதில் பூச்சி மற்றும் மாவுப்பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த, ஆரம்பகட்ட கண்காணிப்பு மிகவும் அவசியம். இப்பூச்சிகள் தென்பட்டால்… பச்சை மிளகாய்-இஞ்சி-பூண்டு கரைசல் தெளித்து கட்டுப்படுத்தலாம். இது, சிறந்த முறையாக அமையும்.
மண் மாதிரிகள்...
மலர் சாகுபடி செய்யும் நிலங்களில் மண் மாதிரிகள் எடுத்து நூற்புழுத் தாக்குதலைக் கண்காணிக்க வேண்டும். நூற்புழுத் தாக்குதலை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். இல்லையென்றால், இவற்றின் தாக்குதலால், செடிகள் இளம் மஞ்சள் நிறத்துக்கு மாறி கருகிவிடும். நூற்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதில் கோடை உழவு முக்கியப் பங்கு வகிக்கிறது.





















