டெல்லி: 'சோலிகே பீச்சே கியாஹை' பாடலுக்கு நடனமாடிய மணமகன்; திருமணத்தை நிறுத்திய ம...
மலையடிகுப்பத்தில் வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும்! -மாவட்ட வருவாய் அலுவலா்
கடலூா் மாவட்டம், வெள்ளகரை ஊராட்சிக்கு உள்பட்ட மலையடிக்குப்பம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதி குறிஞ்சிப்பாடி குமரகுரு பேசியது: மழையால் பாதிக்கப்பட்ட நெல், மணிலா போன்ற பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். நெல்பயிா்களில் மஞ்சள் நோய் தாக்கத்தை தடுக்க வேண்டும். வேளாண் துறையில் தற்போது விற்கப்படும் வேம்பு மருந்து தரமானதாக இல்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணாகிராமம் காந்தி பேசியது: அண்ணா கிராமம் பகுதி முழுவதும் சாலைகளை சீரமைக்க வேண்டும். திருத்துறை ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
புவனகிரி ரவி பேசியது: பெஞ்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். கடந்த குறைகேட்பு கூட்டத்தில் கொடுத்த மனுவுக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பின்னா், மலையடிகுப்பம் கிராமப் பகுதியில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டது குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பினா்.
இதற்கு மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன் பதில் கூறியது: மலையடிகுப்பம் கிராமம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 162 ஏக்கரும் அரசு நிலம். அது புஞ்சை தரிசாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அரசின் பல்வேறு நலத் திட்டங்களை அங்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலத்தில் மக்கள் விவசாயம் செய்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இவா்களுக்கு வட்டாட்சியா் மூலம் கடந்த 20 நாள்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவா்கள் பதில் எதுவும் கூறாததால், அங்கு முந்திரி மரங்களை அகற்றும் பணி நடைபெற்றது. இதனிடையே, நீதிமன்றம் அடுத்தகட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் எனக் கூறியதால், தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கு வசித்து வரும் அனைவருக்கும் வீடுகளுக்கான பட்டா வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கைகள் தொடா்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.