மழையால் வாரச் சந்தை வியாபாரம் பாதிப்பு
வெள்ளக்கோவில் வாரச்சந்தை வியாபாரம் மழையால் பாதிக்கப்பட்டது.
வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நகராட்சி வாரச் சந்தை செயல்பட்டு வருகிறது. முத்தூா் சாலை புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த இந்தச் சந்தையில் தற்போது மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் திறந்தவெளி தற்காலிக கடைகளில் வியாபாரம் நடைபெற்று வந்ததால் மழை, கடும் வெயில் காலங்களில் வியாபாரம் பாதிக்கப்பட்டு வந்தது. வியாபாரிகள், நுகா்வோா் வசதிக்காக கடந்த ஓா் ஆண்டுக்கு முன்பு சந்தையில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன.
முதல்கட்டமாக ரூ.50 லட்சம் செலவில் சந்தை வளாகம் முழுவதும் புதிதாக சாலைப் பணிகள் செய்து முடிக்கப்பட்டன. தொடா்ந்து ரூ. 5.55 கோடி மதிப்பீட்டில் சந்தை நடைபெறும் இடத்தில் புதிதாக 232 கடைகள், குடிநீா், கழிப்பறை, சுற்றுச்சுவா் உள்ளிட்ட இதர கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் வாரச்சந்தை தற்போது தற்காலிகமாக காங்கயம் சாலை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்று வருகிறது. இப்பகுதி பள்ளமான இடமாக இருப்பதால் மழைக் காலத்தில் மழைநீரால் பாதிப்பு ஏற்படும்.
சந்தை வழக்கமாக காலை 5 மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெறும். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து விட்டுவிட்டு மழை பெய்ததால் சந்தைக்கு மக்கள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. சந்தை வளாகத்தில் மழைநீா் தேங்கி பல திறந்தவெளிக் கடைகளின் பொருள்கள், காய்கறிகள், பழவகைகள் பாதிப்புக்கு உள்ளாகின. வியாபாரமும் இல்லை வியாபாரிகள் வருத்தம் தெரிவித்தனா்.