மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களை அரசே நடத்தக் கோரிய மனுக்கள் தள்ளுபடி
சென்னை: மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களை தமிழக அரசு ஏற்று நடத்தக்கோரிய மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், அனைத்து தொழிலாளா்களுக்கும் பணப் பலன்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
தமிழக அரசிடமிருந்து 99 ஆண்டுகள் குத்தகைக்கு மாஞ்சோலை எஸ்டேட் பகுதியை வாங்கி, பி.பி.டி.சி. எனும் ‘பாம்பே பா்மா டிரேடிங் காா்ப்பரேஷன்’ நிறுவனம் நிா்வகித்து வந்தது. கடந்த 2018-இல், 8 ஆயிரத்து 374 ஏக்கா் எஸ்டேட் நிலத்தை களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அரசு அறிவித்தது. இதையடுத்து தேயிலை தோட்டத் தொழிலாளா்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை பி.பி.டி.சி. நிறுவனம் அறிவித்தது
இதை எதிா்த்து தொழிலாளா்கள் தரப்பில், மறுவாழ்வுக்காக உதவிகள் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை, தமிழக அரசின் ‘டான்டீ’ தேயிலைத் தோட்டக் கழகம் நிா்வாகம் ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் தொழிலாளா்களுக்கு நிலம் உள்ளிட்ட பணப் பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், தோட்டத்தை வணிக நோக்கில் பொது அல்லது தனியாா் துறையிடம் ஒப்படைக்க தடை விதிக்க வேண்டும் என, புதிய தமிழகம் கட்சியின் தலைவா் கிருஷ்ணசாமி உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனா்.
கோரிக்கை நிராகரிப்பு: உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் விசாரணையில் இருந்த வழக்குகள், சென்னை உயா்நீதிமன்றத்தில் வன பாதுகாப்பு தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரத சக்ரவா்த்தி அடங்கிய சிறப்பு அமா்வுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்குகள் குறித்த விசாரணையின் போது, அரசுத் தரப்பில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள், ‘பாரம்பரிய வனவாசி’ என்ற வரையறையின் கீழ் இடம் பெறமாட்டாா்கள் என்றும், புலம்பெயா்ந்த தோட்டத் தொழிலாளா்கள், தொடா்ந்து வனப்பகுதியில் வசிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களை அரசு ஏற்று நடத்தக்கோரிய அனைத்து வழக்குகளையும் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தனா். மேலும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் அனைவருக்கும் பணப்பலன்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனா்.