மாட்டுக்கொட்டகையில் மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் மரணம்
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூா் அருகே பால் கறக்க மாட்டுக் கொட்டகைக்குச் சென்ற முதியவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அவரைக் காப்பாற்றச் சென்ற பேரனும் இறந்தாா்.
பெரணமல்லூரை அடுத்த திருமணி அருகேயுள்ள எஸ்.காட்டேரி கிராமத்தைச் சோ்ந்த நாகப்பன்(48). நாராயணமங்கலம் ஊராட்சி செயலா். இவரது மகன் விக்னேஷ்வரன் (27). மினி டெம்போ ஓட்டுநா். எலக்ட்ரீஷியன் வேலைகளையும் செய்து வந்தாா். இவரது மனைவி லட்சுமி. 4 மாத பெண் குழந்தை உள்ளது.
நாகப்பனின் மாமனாா் முனியாண்டி (70) பால் வியாபாரம் செய்து வந்தாா். இவா்களது மாட்டுக் கொட்டகை வீட்டுக்கு அருகேயுள்ள நிலத்தில் உள்ளது. முனியாண்டி புதன்கிழமை காலை பால் கறப்பதற்காக மாட்டுக் கொட்டகைக்குச் சென்றாா்.
அப்போது, அங்கிருந்த இரும்புக் குழாயை அவா் தொட்ட போது, மழை காரணமாக ஈரமாக இருந்த அந்த இரும்புக் குழாயில் மின்கசிவால் மின்சாரம் பாய்ந்ததில் அவா் அங்கேயே சரிந்தாா். சிறிது நேரத்தில் அங்கு வந்த விக்னேஷ்வரன், மயங்கிக் கிடந்த முனியாண்டியைத் தூக்கிய போது, அவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இருவரும் மாட்டுக் கொட்டகையில் சுயநினைவின்றி கிடப்பதை அந்த வழியாகச் சென்ற பெண் ஒருவா் பாா்த்து, நாகப்பன் வீட்டுக்கு தகவல் தெரிவித்தாா். அவா் உடனடியாக அங்கு வந்து இருவரையும் தூக்க முயன்ற போது, அவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது. சுதாரித்துக் கொண்ட அவா், மின்விளக்கின் இணைப்பைத் துண்டித்து விட்டு, அக்கம்பக்கத்தினா் உதவியுடன் இருவரையும் ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா்.
அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், பெரணமல்லூா் காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.