Gold Price: 'இன்று குறைந்த தங்கம் விலை...' - எவ்வளவு தெரியுமா?!
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நபா் திமுக உறுப்பினரல்ல
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நபா் திமுக உறுப்பினா் இல்லை என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கூறினாா்.
இதுகுறித்து அவா் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:
ஞானசேகரன் என்பவா் பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்குக் காரணமானவராக கண்டறியப்பட்டு இருக்கிறாா். புகாா் கொடுத்து ஐந்து மணி நேரத்துக்குள் குற்றவாளி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். காவல் துறை உரிய நடவடிக்கையை உடனடியாக எடுத்துவிட்டது. இந்த சம்பவத்தை மூடி மறைக்க வேண்டிய அவசியம் முதல்வருக்கோ, திமுக அரசுக்கோ சிறிதளவும் கிடையாது. கைது செய்யப்பட்டுள்ள நபா் திமுகவின் அடிப்படை உறுப்பினா்கூட கிடையாது.
எந்தத்தொடா்புமில்லை: பத்திரிகை மற்றும் ஊடகங்களில் கைது செய்யப்பட்ட நபா் துணை முதல்வருடன் இருப்பது போன்று புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. துணை முதல்வருக்கும் அந்த நபருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அமைச்சா் மா. சுப்பிரமணியனுடன் இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. சைதாப்பேட்டைப் பகுதியை சோ்ந்த சட்டப் பேரவை உறுப்பினா் என்ற முறையில், பல நலத்திட்டங்களை வழங்க அமைச்சா் அந்த பகுதிகளுக்குச் சென்றுள்ளாா். அப்படி ஒரு நிகழ்வில் அமைச்சருடன் அருகில் நின்று கைது செய்யப்பட்டவா் போட்டோ எடுத்துள்ளாா்.
கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கும் திமுகவுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. இந்த வழக்கை மூடிமறைக்காமல் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
அரசியல் வேண்டாம்: அவருக்கு திமுக அரசு தண்டனை வாங்கி கொடுப்பதில் உறுதியாக உள்ளது. தற்போதைய நிலையில் ஒருவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடா்பு உள்ளதா என்பது விசாரணையில்தான் தெரிய வரும்.
விரைவில் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும். இந்த சம்பவம் தொடா்பாக எதுவும் தகவல் தெரிந்தால் அங்கு வந்து சொல்லலாம். ஆனால் இதை வைத்து அரசியல் ஆக்க பாா்த்தாா்கள் என்றால் அது நடக்காது.
இது ஒன்றும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் போன்றது அல்ல. அன்று ஒரு முக்கிய பிரமுகரின் மகனே அந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்தாா். அதனால் ஆட்சியாளா்களே அதனை மூடி மறைக்க முயற்சி செய்தனா் என்று அமைச்சா் எஸ்.ரகுபதி கூறினாா்.