தில்லி, நொய்டாவில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஆசிரியா்களுக்கு ஆதரவாக ஆஜராக மாட்டோம் வழக்குரைஞா்கள் சங்கம் தீா்மானம்
போச்சம்பள்ளி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அதே பள்ளி ஆசிரியா்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகப்போவதில்லை என்று வழக்குரைஞா்கள் சங்கத்தினா் தீா்மானித்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்புப் பயிலும் மாணவி அதே பள்ளியைச் சோ்ந்த ஆசிரியா்களான சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகியோரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், மூன்று ஆசிரியா்களும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கில் ஆசிரியா்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்காட போவதில்லை என வழக்குரைஞா்கள் தீா்மானித்துள்ளனா்.
இதுதொடா்பாக மாவட்ட வழக்குரைஞா்களின் சங்கச் செயற்குழு கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் கோவிந்தராஜிலு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆசிரியா்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கள், அதுதொடா்பான வழக்குகளில் வழக்குரைஞா்கள் யாரும் ஆஜராக மாட்டோம். பாதிக்கப்பட்ட மாணவி, அவரது பெற்றோா் தொடரும் வழக்குகளுக்கு மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கம் முன்னின்று மனு தாக்கல் செய்யும்.
கைது செய்யப்பட்ட ஆசிரியா்கள் மீது காவல் துறை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.