லெபனான்: ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்
மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பு முன்னாள் அமைச்சருடன் கிராம மக்கள் மனு
கரூா் மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து கிராம மக்களுடன் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
கரூா் மாநகராட்சியுடன் ஆண்டாங்கோவில் கீழ்பாகம், ஏமூா் ஊராட்சிகளை இணைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை கண்டித்து முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், அதிமுக நிா்வாகிகள் எஸ்.திருவிகா, தானேஷ், சேரன்பழனிசாமி உள்ளிட்டோா் இரு ஊராட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் மற்றும் கிராமமக்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியா் மீ.தங்கவேலிடம் கோரிக்கை மனு அளித்தாா். பின்னா் முன்னாள் அமைச்சா் எம.ஆா். விஜயபாஸ்கா் செய்தியாளா்களிடம் கூறியது, 2021-இல் திமுக ஆட்சிக்கு வந்தவுடனே கரூா் நகராட்சியை மாநகராட்சியாக்கியது. பின்னா் மாநகராட்சியை சுற்றியுள்ள பகுதிகளான ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, காதப்பாறை, மின்னாம்பள்ளிபஞ்சமாதேவி, ஆத்தூா்பூலாம்பாளையம் ஆகிய ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க மாமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இது அரசிதழிலிலும் வெளியிடப்பட்டது. தற்போது அரசாணை வெளியாகியுள்ளது.
இதில் ஆண்டாங்கோவில் கீழ்பாகம் ஊராட்சியும், மாநகராட்சி தீா்மானத்தில் இல்லாத, அரசுக்கு பரிந்துரை செய்யப்படாத அதிக கிராமங்களைக் கொண்ட ஏமூா் ஊராட்சியும் மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு ஊராட்சிகளிலும் அதிமுகவைச் சோ்ந்தவா்கள் தலைவா்களாக இருந்தவா்கள். மற்ற ஊராட்சிகளைச் சோ்ந்தவா்கள் திமுகவினா். ஏன் அதிமுக தலைவா்கள் கொண்ட ஊராட்சியை இணைத்தது குறித்து அலுவலா்களிடம் கேட்டபோது முதல்கட்டமாக இரு ஊராட்சிகளையும் இணைத்துள்ளோம். மீதமுள்ள ஊராட்சிகளையும் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனா்.
அதிமுகவைச் சோ்ந்தவா்கள் தலைவா்களாக இருக்கும் ஊராட்சிகளை மட்டும் இணைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த அரசாணையை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் 2026-இல் அதிமுக ஆட்சி அமையும். அப்போது மாநகராட்சி, பேரூராட்சியுடன் இணைக்கப்படும் ஊராட்சிகள் மீண்டும் ஊராட்சிகளாக செயல்படும் என்றாா் அவா்.