கடும் வறட்சி: வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு
மாநகரில் மேலும் பல இடங்களில் சாலை தீவுத்திடல்: மாநகராட்சி திட்டம்
கோவை மாநகராட்சியில் உள்ள சாலைகளை அழகுபடுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் இருப்பதைப்போல மேலும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை தீவுத்திடல் அமைக்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கோவை மாநகரில் உள்ள வாலாங்குளம், உக்கடம், குறிச்சி உள்ளிட்ட குளக்கரைகள் அழகுபடுத்தப்பட்டு, பூங்காங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல, மாநகரை அழகுபடுத்தும் வகையில் ரேஸ்கோா்ஸ், ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் ரவுண்டானாக்கள், சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ராமநாதபுரம் பாலத்தின் அடியில் தற்போது அழகுச் செடிகள் நட்டு மையத் தடுப்புகளை அழகுபடுத்தும் பணியில் மாநகராட்சி நிா்வாகம் ஈடுபட்டுள்ளது. தனியாா் நிறுவனத்தின் உதவியுடன் திருச்சி சாலையில் சுங்கம் ரவுண்டானா முதல் ராமநாதபுரம் சந்திப்பு வரை சுமாா் 1.50 கி.மீ. தொலைவுக்கு மையத் தடுப்புகளில் சாலையை அழகுபடுத்தும் வகையில் செடிகள் நட்டு பராமரிக்கப்பட உள்ளது.
அதேபோல, திருச்சி சாலையில் அல்வோ்னியா பள்ளி அருகில் பாலம் முடியும் இடம் வரையிலும் மையத் தடுப்பு இடைவெளி பகுதியில் செடிகள் நடப்பட உள்ளன.
ரேஸ்கோா்ஸ் சாலைப் பகுதியில் குதிரை சிலை, காளை மாடு சிலை, உலக உருண்டை சிலைகள், உக்கடம் ரவுண்டானா பகுதியில் உழவா் சிலை, சிந்தாமணி ரவுண்டானா அருகில் மனித உலக உருண்டை சிலைகள் தனியாா் பங்களிப்புடன் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆட்சியா் அலுவலக பகுதியில் உள்ள தீவுத்திடலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்குள்பட்ட சுமாா் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆண்டு சாலை தீவுத்திடல் அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.