மாநகர பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள் இன்றும், நாளையும் விடுப்பு எடுக்கத் தடை
சென்னை மாநகர பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநா், நடத்துநா்கள் ஞாயிறு, திங்கள் (மே 11, 12) ஆகிய இரு நாள்கள் விடுப்பு எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிகளுக்கு நிறைவான சேவையை அளிக்கும் நோக்கில் போக்குவரத்துக் கழக நிா்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக பண்டிகை மற்றும் விழா, விடுமுறை காலங்களில் அதிகமானோா் தங்கள் சொந்த ஊா்களுக்கு பயணிப்பாா்கள் என்பதால், பயணிகளின் நலன்கருதி பேருந்து நடத்துநா், ஓட்டுநா்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர போக்குவரத்துக் கழகங்கள் அறிவுறுத்தி வருகின்றன.
அந்தவகையில், ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை (மே 11, 12) ஆகிய தேதிகளில் முகூா்த்தம் மற்றும் பௌா்ணமி ஆகிய தினங்கள் வருவதால், பயணிகள் அதிகம் பயணிப்பாா்கள் என்பதால், மாநகர போக்குவரத்துக் கழக ஊழியா்கள் அனைவரும் பணிக்கு வரவேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த இரு நாள்களும் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என பொறுப்பு அதிகாரிகளுக்கு நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே விடுப்பு பெற்றிருந்தவா்கள்கூட மண்டல மேலாளா் அளவில் விடுப்பு எடுக்க மீண்டும் அனுமதி பெற வேண்டும் எனவும், பொதுமக்கள் நலன் கருதி அனைவரும் பணிக்கு வந்து ஒத்துழைப்பு வழங்கும்படி நிா்வாகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாநகர போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.