மாநில அளவிலான கேரம் போட்டிகள் தொடக்கம்
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான கேரம் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
விருதுநகா் மாவட்ட கேரம் கழகம், சிவகாசி காளீஸ்வரி பயா் ஒா்க்ஸ் இணைந்து, நடத்திய இந்தப் போட்டியில் 22 மாவட்டங்களிருந்து 335 வீரா்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனா். போட்டிகள் 18, 21 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகள் என இரு பிரிவுகளாக நடைபெற்றன.
இந்தப் போட்டியை விருதுநகா் மாவட்ட கேரம் கழகத் தலைவா் ஏ.பி.செல்வராஜன் தலைமையில், மாவட்ட உடற்கல்வித் துறை ஆய்வாளா் ஹெச்.ஜே.ஜாஹீா் உசேன் தொடங்கிவைத்தாா்.
இதில் தமிழ்நாடு கேரம் கழகத் தலைவா் எம்.நசீா்ஹான், பொதுச் செயலா் ஏ.மரிய இருதயம், கல்லூரி முதல்வா் பெ.கி.பாலமுருகன், விருதுநகா் மாவட்ட கேரம் கழகச் செயலா் டி.எம்.ராஜகோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்தப் போட்டிகள் வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 25) நிறைவடைகின்றன.