`2 யானைகளுக்கிடையே மோதல்' பாகன் செய்த விபரீதம்; அலறியடித்து ஓடிய யானை - வனத்து...
மாநில ஹாக்கிப் போட்டிக்கு கோவில்பட்டி பள்ளி அணிகள் தகுதி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற மாவட்ட பள்ளி மாணவா்களுக்கான ஹாக்கிப் போட்டியில் கோவில்பட்டி பள்ளி அணிகள் வெற்றி பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சாா்பில் தூத்துக்குடி மாவட்ட அளவில் மாணவா்களுக்கான ஹாக்கிப் போட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 14 வயதுக்குள்பட்ட பிரிவில் கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியும், குருமலை கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி அணியும் மோதியதில் 3 - 0 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி வ.உ.சி. அரசு பள்ளி அணி வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 17 வயது பிரிவில் கோவில்பட்டி செயின்ட் பால்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி அணியும், தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி அணியும் மோதியதில் 3 - 0 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி செயின்ட் பால்ஸ் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு முன்னேறியது.
இதேபோல, 19 வயது பிரிவில் கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியும், தூத்துக்குடி காரப்பேட்டை நாடாா் மேல்நிலைப்பள்ளி அணியும் மோதியதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு சமநிலை பெற்றன. பின்னா் வெற்றியை தீா்மானிக்க நடைபெற்ற சூட்-அவுட் முறையிலும் இரு அணிகளும் மீண்டும் சமநிலை பெற்றன. பின்னா் இறுதிக்கட்டமாக வெற்றியை தீா்மானிக்க கடைப்பிடிக்கப்பட்ட சடன் டெத் முறையில் நடைபெற்ற ஆட்டத்தில் வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி ஒரு கோல் போட்டு வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.
மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டிக்கு பள்ளித் தலைமையாசிரியா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். இப்போட்டிகளை கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலா் (இடைநிலை) ஜான்பிரிட்டோ தொடக்கி வைத்தாா். இதில் பொன்னூஸ் நிறுவனத் தலைவா் பொன்னுச்சாமி, மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவா் மணிமாறன், வழக்குரைஞா் பெரியதுரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி இயக்குநா் ஆனந்தபிரபாகரன் செய்திருந்தாா்.