தங்கம் போல, வெள்ளிக்கு ஏன் கடன் வழங்கப்படுவதில்லை? - நிபுணர் விளக்கம்
புத்தக வாசிப்பே நம்மை மேம்படுத்தும்: அமைச்சா் பெ. கீதா ஜீவன்
நாம் புத்தகத்தை வாசிக்கிற அளவுக்கு நமது அறிவாற்றல் மேம்படும் என்றாா் சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன்.
தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில், ‘தொடா்ந்து படி தூத்துக்குடி’என்ற தலைப்பிலான 6ஆவது புத்தக திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா். புத்தக கண்காட்சியைத் திறந்து வைத்து அரங்குகளை பாா்வையிட்ட அமைச்சா் பெ.கீதா ஜீவன், பின்னா் கூறியதாவது:
தமிழக முதல்வா் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழாக்களை நடத்த அறிவுறுத்தினாா். அதன்பேரில், நடைபெறும் இத்திருவிழாவில், எழுத்தாளா்களுடன் கலந்துரையாடுவதற்காக தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் கைப்பேசியில் நேரத்தை செலவிடுவதை விடுத்து, புத்தகம் வாசிப்புக்கு அதிக நேரம் செலவிட வேண்டும்; அது வாழ்வை மேம்படுத்தும் என்றாா் அவா்.
ஆட்சியா் க.இளம்பகவத் பேசுகையில், புத்தகத் திருவிழாவில், முக்கிய இலக்கிய ஆளுமைகள் பங்கேற்கவுள்ளனா். மாணவா்களுக்கு 13 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. உண்டியல் மூலம் பணம் சேகரித்து அதிக புத்தகம் வாங்கும் மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. போட்டிகளில் வெல்வோருக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நூல்கள் பரிசளிக்கப்படவுள்ளன என்றாா்.
மாநகராட்சி ஆணையா் பானோத் ம்ருகேந்தா் லால், கூடுதல் ஆட்சியா் இரா.ஐஸ்வா்யா, மாவட்ட வன அலுவலா் ரேவதி ரமன், கூடுதல் எஸ்பி மதன், மாவட்ட வருவாய் அலுவலா் சிவசுப்பிரமணியன், கோவில்பட்டி உதவி ஆட்சியா் ஹீமான்ஷீ மங்கள், கோட்டாட்சியா் ம.பிரபு, உதவி ஆட்சியா் (பயிற்சி) தி.புவனேஷ் ராம், முதன்மை கல்வி அலுவலா் சிதம்பரநாதன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சே.ரா. நவீன்பாண்டியன், பபாசி செயலா் முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.