செய்திகள் :

மார்ட்டின் லூதர் கிங் கொலை முயற்சியில் மிஷாவ்- ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை - பகுதி 16

post image
கறுப்பர்களை இனப்பாகுபாட்டோடு நடத்துவதற்கு எதிராக, அமெரிக்காவில் ஏராளமான குடியுரிமை அமைப்புகள் போராடி வந்தன.

அவற்றில் குறிப்பிடத்தக்க இயக்கம் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் செயல்பட்ட ‘தெற்கு கிறிஸ்துவ தலைமை மாநாடு (Southern Christian Leadership Conference - SCLC)’ அமைப்பாகும். ஒரு 'கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்ட வேண்டும்' என்ற அகிம்சை கொள்கையில் தீவிர பிடிப்பு கொண்டவர் கிங். வெள்ளையர்கள் இனவெறியோடு கறுப்பர்களை ஒதுக்கி வைத்தாலும், கறுப்பர்கள் அதற்கு பலியாகாமல் வெள்ளையர்களோடு இணைந்து வாழ வேண்டும்; வெள்ளையர்களின் இன ஒதுக்கல் செயல்பாடுகளை சகித்துக்கொண்டு அவர்களை திருத்தவேண்டும்; வெள்ளையர்களோடு மோதல் போக்கைக் கடைபிடிக்கக் கூடாது போன்ற கொள்கைகளில் உறுதியாக இருந்தார். அடங்கிப்போகும் இந்த சிந்தனையை மறுத்து, புதிய தலைமுறை கறுப்பின இளைஞர்கள் கோபாவேசம் கொண்டெழுந்தது அவ்வப்போது நிகழ்ந்தது. 

SCLC

அதேசமயம், கறுப்பர்கள் பேருந்துகளில் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கக் கோரி, கிங் தூண்டிவிட்ட, ‘பேருந்து புறக்கணிப்புப் போராட்டம்’ மிகப் பெரிய வெற்றி பெற்றது. பேருந்துகளில் பின்னால் உள்ள இருக்கைகளில்தான் கறுப்பர்கள் அமர வேண்டும். அப்படி அமர்ந்திருக்கும்போது வெள்ளையர்கள் ஏறி, அவர்கள் அமர இருக்கை இல்லையென்றால், அமர்ந்திருக்கும் கறுப்பர்கள் எழுந்து வெள்ளையர்களுக்கு இருக்கையை விட்டுக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் சிறை செல்ல வேண்டும். இதுதான் அமெரிக்காவின் அப்போதைய நிலை.

இனவெறியை சட்டப்பூர்வமாகக் கடைபிடிக்கும் மாகாணங்களில் ஒன்று அலபாமா. அந்த மாகாணத்தின் மாண்ட்கொமரி நகரில், 1955-ம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி, இருக்கையில் அமர்ந்து பேருந்தில் பயணித்த கறுப்பினப் பெண்மணி ரோஸா பர்க்ஸ், வெள்ளையர் வந்ததும் எழுந்து இடமளிக்கவில்லை. இதனால் அவர் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிராக கிங் விடுத்த ‘பேருந்து புறக்கணிப்பு போராட்ட’ அழைப்பு கறுப்பர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் பேருந்தை பயன்படுத்துபவர்களில், நான்கில் மூன்று பங்கு பயணிகள் கறுப்பர்கள்தான்.

கூலித் தொழிலாளர்களான கறுப்பர்களே பேருந்துப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தினர். கிங்கின் அழைப்பைச் செவிமடுத்து பள்ளிக்குச் செல்லும் கறுப்பின மாணவர்களும் வேலைக்குச் செல்லும் கறுப்பர்களும் பேருந்தை புறக்கணித்து கால்நடையாகவே சென்று வந்தனர். ஓராண்டாக இந்தப் போராட்டம் நீடிக்கவும் (1956-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி வரை), இறுதியில் எந்த இருக்கையில் வேண்டுமானாலும் கறுப்பர்கள் அமரலாம் என இனவெறியர்கள் இறங்கி வந்தனர். இந்த வெற்றியால் கிங்கின் செல்வாக்கு கறுப்பர்கள் மத்தியில் உயர்ந்தது. போலவே, வெள்ளை இன வெறியர்கள் மத்தியில் அவரின் நாட்களை எண்ணச் செய்யும் சிந்தனையும் உதித்தது. 

பேருந்து புறக்கணிப்புப் போராட்டம் பற்றி விரிவாக படித்திருந்ததால், அந்த நாட்களில் பிரபலமாக அறியப்பட்ட தலைவர்களில் ஒருவரான மார்ட்டின் லூதர் கிங்குடன், லூயிஸ் மிஷாவ்வுக்கு எப்படிப்பட்ட தொடர்பு இருந்தது என்பதை அறிய விரும்பினேன். ஆனால், அவருடன் பேசிய கொஞ்ச நேரத்திலேயே, ‘அவர் மால்கமின் ஆள்’ என்பதைப் புரிந்துகொண்டேன். அப்போதுதான் மின்னல் வெட்டியதைப் போல, அந்தச் சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்தது.

“மிஷாவ், 1968-ம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். ஆனால் அதற்கு சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1958-ம் ஆண்டு, அவரை ஒரு பெண் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் உங்கள் பெயரும் அடிபட்டதே…” இப்படி கேட்டு வைத்தேன்.

“இவானிட்டி மிஷேல்… சில விஷயங்களை உங்களுக்கு தெளிவுபடுத்திட்டு, அந்த விஷயத்துக்கு வர்றேன். ஒரு குறிப்பிட்ட இலக்கோடு நான் புத்தகக் கடையை தொடங்கினேன். அது படிப்படியாக வளர்ந்து அமெரிக்காவின் கறுப்பர்களுக்கான மிகப் பெரிய புத்தகக் கடையாக அடையாளம் பெற்றது. என்னைப் பார்த்து மற்ற நகரங்களிலும் கறுப்பர்கள் புத்தகக் கடையைத் தொடங்கினாங்க. எங்களுடைய நோக்கமெல்லாம், கறுப்பர்களின் விடுதலைதான். கறுப்பர்களை அணிதிரட்டுதல், இயக்கத்திற்கு ஆட்சேர்ப்பு, ஆர்ப்பாட்டம், போராட்டம், கொள்கை வகுப்பு, கருத்தரங்கு - இவைகளைப் போல புத்தக விற்பனையையும் புரட்சியின் ஒரு பகுதியாகத்தான் நான் பார்த்தேன். அதில் வெற்றியும் அடைந்தோம். கறுப்பர்கள் தங்கள் உரிமைகளைப் பெற அணி திரள்வதில் ஆர்வம் காட்டினர். உத்வேகம் குறையாமல் கறுப்பர்களை ஊக்குவிக்க வாசிப்புத்தான் கறுப்பர்களுக்கு பெரிய உந்துசக்தியாக இருந்தது. அந்த வகையில் கறுப்பின புத்தகக் கடைகளே கறுப்பின விடுதலையில் முக்கிய பங்கு வகித்தன.

“நீக்ரோ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது குறைந்து கறுப்பர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்துவது பிரபலமானதற்கு கறுப்பின புத்தகக் கடைகளே காரணம் எனச் சொல்லலாம். இந்தப் பின்னணியை மனசுல வச்சிக்கிட்டு நீங்க குறிப்பிட்ட அந்த சம்பவத்தைப் பார்க்கணும். ‘பேருந்து புறக்கணிப்பு போராட்டம்’ வெற்றி பெற்றதை மையமாக வைத்து மார்ட்டின் லூதர் கிங், ‘சுதந்திரத்தை நோக்கி முன்னேறு - Stride Toward Freedom’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதியிருந்தார். அந்தப் புத்தகத்தைப் பிரபலப்படுத்துவதற்காக, ஹார்லெம் நகருக்கு அவர் வதிருந்தார். எங்க வந்தார் தெரியுமா?”

சொல்லிவிட்டு என்னைப் பார்த்தவர் கண்ணாடியைச் சரி செய்து, பெட்டி கொடுத்த பழச்சாற்றை குடித்து விட்டுத் தொடர்ந்தார். 

“செப்டம்பர் 20-ம் தேதி, 1958-வது வருஷம் அது. கறுப்பர்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளாத வெள்ளை உரிமையாளர் ப்ளூம்ஸ்டெயினின் டிபார்மெண்ட் ஸ்டோருக்குத்தான் கிங் வந்தார். அங்கு வைத்து அவரின் புத்தகங்களில் கையொப்பமிட்டு விற்பனையைப் பெருக்கி, வெள்ளைக்காரரின் கல்லாப் பெட்டியை நிரப்பத்தான் அவர் ஹார்லெம் நகருக்கு வந்திருந்தார். அவர் வெள்ளையர் ஒருவரின் கடைக்கு வருவதை எதிர்த்து அப்போது நாங்கள் போராட்டம் நடத்தினோம். ஹார்லெம் நகரில், கறுப்பர்களுக்கான பிரத்யேக புத்தக கடையாக என்னுடைய கடை செயல்பட்டு வந்தது எல்லாருக்குமே தெரியும்.

என்னுடைய கடைக்கு கிங்கை வரவைக்க அவருடைய உதவியாளரை பலமுறை தொடர்பு கொண்டேன். பதில் இல்லை. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கறுப்பினப் பெண் ஒருத்தி, கிங்கின் நெஞ்சில் கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தை வைத்து குத்த களேபரமானது. அதிர்ஷ்டவசமாக கிங்கின் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை. அது ஒரு அவமானகரமான சம்பவம். மற்றபடி அந்தச் சம்பவத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்புமில்லை. அவரோ, அவருடைய பதிப்பாளரோ என் கடைக்கு ஒரு நாளும் வந்ததே இல்லை…”

என்னுடைய நேர்காணல், பரபரப்பூட்டுகிற பகுதியை இப்போதுதான் தொடுகிறது என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அந்தப் பரபரப்பை மேலும் கிளர்ச்சியூட்டுகிற தளத்துக்கு கொண்டு செல்ல நினைத்தபோது அடுத்த கேள்வி இயல்பாக எழுந்தது.

“கறுப்பர்களின் மெக்கா என அழைக்கப்படும் ஹார்லெம் நகரின் அடையாளமாகவும், கறுப்பர்களுக்கான பிரதேயக புத்தகக் கடையின் உரிமையாளராகவும், அறியப்பட்ட கறுப்பின தேசியவாதியாகவும், புரஃபஸர் என அன்பொழுக அழைக்கப்பட்ட பிரபலமுமான லூயிஸ் மிஷாவ்வை, கிங் புறக்கணிக்க காரணம் என்ன?”

“காரணம் என்ன? என்ன காரணம் இருக்க முடியும் இவா? ரொம்ப சிம்பிள்... கிங்குக்கு ஸ்பான்சர் செய்யும் வெள்ளையர்களின் கண்களுக்கு இரண்டு விஷயங்கள் உறுத்தலாக இருந்திருக்கலாம். ஒன்று மால்கம் X உடனான என்னுடைய நட்பு. இரண்டு முற்போக்குவாதிகளுடனான என்னுடைய தொடர்பு. தனிப்பட்ட முறையில் என்னுடைய கடைக்கு வர கிங்குக்கு விருப்பம் இருந்தாலும்கூட, அவருக்கு ஸ்பான்சர் செய்யும் தனவந்தர்கள் அவரைத் தடுத்திருக்கலாம்.”

முற்போக்குவாதிகள் என்றால் கம்யூனிஸ்ட்டுகள் என்று நான் புரிந்துகொண்டேன். ‘சிவப்பு அபாயம்’ பற்றிய பயம் அமெரிக்க ஆளும் வர்க்கத்தை எப்போதுமே அரித்து வந்திருப்பதால், அதற்குள் சிக்கிக் கொள்ள வேண்டாமென கிங் நினைத்திருக்கலாம். அதனால், மிஷாவ்வின் கடைக்கு அவர் வருவதைத் தவிர்த்திருக்கலாம். 

“மால்கமும் கறுப்பர்களின் உரிமைகளுக்காகத்தானே குரல் கொடுத்தார்? பிறகு ஏன் அவருடன் நட்பு பாராட்டிய உங்களை கிங் ஒதுக்க வேண்டும்?”

“ஒன்றிணைதல் (Integration) கொள்கையில் நம்பிக்கை கொண்டவர் கிங். வெள்ளையர்களும் கறுப்பர்களும் இந்த சமூகத்தில் இணைந்து வாழ்ந்து விட முடியும் என்று அவர் நம்பினார். அதனால் வெள்ளையர்களை கோபித்துக் கொள்ளாமல், நிறவெறியை சகித்துக் கொண்டு அவர்களை திருத்த வேண்டும் என கிங் விரும்பினார். ‘அதெல்லாம் வெள்ளையன் திருந்த மாட்டான், அடித்தால் அவனை திருப்பி அடி. வெள்ளையனுக்கு எந்த மொழியில் பதில் சொன்னால் புரியுமோ, அந்த மொழியில் அவனுக்கு பதில் சொல்’ - இது மால்கமின் வாதம். அதனால் மால்கமை ‘வெறுப்பை போதிப்பவர்’ எனத் தூற்றினர்.

அவருடைய ‘ஹேங்அவுட்’டாக இருந்த என்னுடைய கடையை ‘வெறுப்பை உற்பத்தி செய்யும் நிலையம்’ என அழைத்தனர். ஆனால், வெள்ளையர்களைப் பொறுத்தவரை கிங் - மால்கம் இரண்டு பேருமே ஆபத்தான ஆட்கள்தான். என்ன... மால்கமோடு ஒப்பிடும் போது கிங், கொஞ்சம் குறைவான அபாயம் கொண்ட ஆள். அவ்வளவுதான். 

“கிங் ஓர் அற்புதமான திட்டத்தை வைத்திருந்தார், மிக அழகாகப் பேசுவார். அவர் நன்றாகப் படித்தவர். அதுதான் சிக்கலே… ஆமாம். படிப்பறிவில்லாத கறுப்பர் ஒருவர், கிங் எதைப் பற்றிப் பேசுகிறார் என்பதைக் கண்டுபிடிக்க அவருடைய கூட்டத்துக்கு செல்லும்போது தனது சட்டைப் பையில் ஓர் அகராதியை எடுத்துச் செல்ல வேண்டும்.”

- பக்கங்கள் புரளும்

புத்தகங்களும் அதை வாசிப்பவர்களிடம் உண்டாக்கும் தாக்கமும்; ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை - பகுதி 17

தொழில் என்னவோ புத்தகக் கடைதான், ஆனால் அதில் விற்கப்படும் புத்தகங்களும் அதை வாசிப்பவர்களிடம் உண்டாக்கும் தாக்கமும் அமெரிக்க வெள்ளை இனவாத அரசுக்கு நெருக்கடியைத் தரும் அல்லவா...அமெரிக்கா என்பது மாகாணங்கள... மேலும் பார்க்க

லாஃப்ரா யாழினி ஐபிஎஸ் – அத்தியாயம் 5 | தொடர்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

தற்சார்பு பொருளாதாரமும் புத்தகக் கடையும் - ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை - பகுதி 15

அடிமை முறையை அமெரிக்க மண்ணிலிருந்து சட்டப்பூர்வமாக அகற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் மேலெழுந்த 19-ம் நூற்றாண்டிலேயே, புத்தகக் கடைகள் - கறுப்பர்களுக்கான பிரத்யேக புத்தகக் கடைகள் அமெரிக்காவில் உதயமாகத் த... மேலும் பார்க்க

`தாள்கள் உருவாக்கிய தானைத் தலைவன்' - ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை - பகுதி 14

லூயிஸ் மிஷாவ் - பெட்டி லோகன் தம்பதியினரின் மகன் லூயிக்கும் மால்கமுக்குமான நட்பு இந்த நேர்காணலுக்குத் தேவையா? அவசியமாக இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால் பத்திரிகைக்கு எழுதிக் கொடுக்கும் பிர... மேலும் பார்க்க

`காகித நேசம்' - ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை - பகுதி 13

அமெரிக்க கறுப்பினப் போராளி மால்கம் X பற்றிய பேச்சு எழுந்ததால், லூயிஸ் மிஷாவ்வுக்கும் மால்கமுக்குமான நெருக்கம் பற்றிய தகவல்களோடு, நேர்காணல் சுவாரஸ்யமாகப் போவதாக நினைத்தேன்.ஆனால், மிஷாவ் தன் மனைவியின் ப... மேலும் பார்க்க

கண்ணுக்குத் தெரியாதவன் கதை சொல்கிறேன்... கேட்பீர்களா?! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க