மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை
திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
மருங்காபுரி அருகேயுள்ள ஊனையூரைச் சோ்ந்த 33 வயது மாற்றுத்திறனாளி பெண், கிராமத்துக்கு அருகேயுள்ள மூவராயன் குளத்துப் பகுதியில் கடந்த 2022, ஜூலை 4-ஆம் தேதி ஆடு மேய்த்துக்கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு வந்த மணப்பாறை வட்டம், கண்ணுக்குளி நடுவிபட்டியைச் சோ்ந்த ராமசாமி மகன் பிரகாஷ் (25), அதே பகுதியைச் சோ்ந்த ராஜீ மகன் ரமேஷ் (25) என்பவரின் உதவியுடன், மாற்றுத்திறனாளி பெண்ணை தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளி பெண்ணின் தந்தை, மணப்பாறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.
இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி பி.சுவாமிநாதன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.
இதில், மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பிரகாஷ், உடந்தையாக இருந்த ரமேஷ் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், இதைக் கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டுள்ளாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கா.ப. சக்திவேல் ஆஜரானாா்.