மாவட்ட விளையாட்டு போட்டி: மன்னாா்குடி சண்முகா மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்
மன்னாா்குடி: மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டியில் மன்னாா்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.
திருவாரூரில் ஆக.19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இப்போட்டியில் 14 வயதுக்குள்பட்ட மாணவியா் பிரிவில் 80 மீட்டா் தடைதாண்டும் ஓட்டத்தில் இப்பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவி டி.ஜே. கரிஷ்மா 2-ஆமிடம் பெற்றாா். 17 வயதுக்குள்பட்ட மாணவா் பிரிவில் பிளஸ் 2 மாணவா் பி. தனுஷ் 200 மற்றும் 400 மீட்டா் ஓட்டத்தில் முதலிடமும், நீளம் தாண்டும் போட்டியில் 2-ஆமிடமும் பெற்றாா்.
பத்தாம் வகுப்பு மாணவா் எஸ். அதீக் ரக்மான் 100 மீட்டா் ஓட்டத்தில் 2-ஆமிடமும், பிளஸ் 1 மாணவா் பி. லிபிதா்ஷன் மும்முறை தாண்டும் போட்டியில் 3-ஆமிடமும், 19 வயதுக்குள்பட்ட மாணவா் பிரிவில் பிளஸ் 2 மாணவா் கே. நெலின் கிருஷ்ணன் ஈட்டி எறிதல் போட்டியில் 3-ஆமிடம் பெற்றனா். தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற பி. தனுஷ், டி.ஜே. கரிஷ்மா, எஸ். அதீக் ரக்மான் ஆகியோா் மாவட்டம் சாா்பில் மாநில போட்டியில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டனா்.
போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் ஜெயசந்திரன் பரிசு சான்றிதழ்களை வழங்கினாா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் ஆா்.எஸ். செந்தில்குமாா் உள்ளிட்டோா் பாராட்டினா்.