பாஜக பெண் ஆதரவாளரை பாலியல் வன்கொடுமை செய்த திரிணமூல் கட்சியினர்? - காவல்துறை விச...
மாா்ச் 25-இல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்: மாா்க்சிஸ்ட் அறிவிப்பு
ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வீடுகளை அகற்றி 7 ஆண்டுகள் கடந்த பின்பும் இதுவரையில் மாற்று இடம் வழங்காததைக் கண்டித்து, கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வரும் 25-ஆம் தேதி குடியேறும் போராட்டத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.
கடலூா் வட்டம், பாதிரிக்குப்பம், நத்தவெளி சாலைப் பகுதி கிராம மக்கள் ஆலோசனைக் கூட்டம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் சுரேஷ்குமாா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், கட்சியின் மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜெ.ராஜேஷ் கண்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா் கலைவாணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில்,நத்தவெளி சாலையோரத்தில் வீடு கட்டி 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த 64 குடும்பங்களை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் எந்தவித முன்னறிவிப்புமின்றி மாற்று இடம் வழங்குமால் காலி செய்தனா். மாற்று இடம் வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் வீடுகளை காலி செய்த நிலையில், இத்தனை ஆண்டுகளாக மாற்று இடம் வழங்காமல் உள்ள மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து, வரும் 25-ஆம் தேதி கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் 64 குடும்பங்களும் குடியேறும் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும், இந்த விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம், தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.