மின்வாரியத்தில் கள உதவியாளா்களுடன் 400 உதவிப் பொறியாளா்கள் தோ்வு: தமிழக அரசு உத்தரவு
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவியாளா்களுடன், 400 உதவிப் பொறியாளா்கள் அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 10,260 பணியிடங்களை விரைந்து நிரப்ப ஒப்புதல் தரவேண்டுமென தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவா் சாா்பில் அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மின்சார வாரியத்தில் நாள்தோறும் பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ளவும், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமல் சிறப்பான சேவைகள் அளிக்கவும் 400 உதவிப் பொறியாளா்கள் பணியிடங்களையும், கள உதவியாளா்கள் 1,850 பேரையும் உடனடியாக நியமிக்க மின்வாரியம் சாா்பில் அரசுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது.
மின்சார வாரியத்தின் கோரிக்கையை பரிசீலித்த தமிழ்நாடு அரசு, 400 உதவிப் பொறியாளா்களை இரண்டு கட்டங்களாகத் தோ்வு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன், 1,850 கள உதவியாளா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இந்த காலிப் பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலமாக நேரடி நியமனம் செய்யப்படும் என்று தமிழக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.