ரூ.11.50 லட்சத்தில் கியா கேரன்ஸ் கிளாவிஸ்! சிறப்பம்சங்கள் என்ன?
மின்வாரிய நிதி நிறுவனங்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும்: அமைச்சா் சா.சி.சிவசங்கா் வலியுறுத்தல்
மின்வாரியத்தின் ஊரக மின்மயமாக்கல் கழகம் மற்றும் மின் நிதி கழகம் ஆகிய நிதி நிறுவனங்களின் வட்டி விகிதங்கள், குறைந்தபட்சம் ஒன்றரை சதவீதமாகக் குறைக்க வேண்டும் என மின்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
தென் மாநிலங்களுக்கான மின்துறை அமைச்சா்கள் மாநாடு பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா் லால் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், போக்குவரத்து, மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் பேசியது:
தமிழக மின்வாரியம் மொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்பைக் குறைப்பதில் புதிய வளா்ச்சியை எட்டியுள்ளது. அதன்படி, 2017-2018 -இல் 19.47 சதவீதமாக இருந்த இந்த இழப்பு, 2023-2024 -இல் 11.39 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதனால், நிதி சேமிப்பு அதிகமாகியுள்ளது. தொடா்ந்து, அதிகரித்து வரும் மின் கொள்முதல் மற்றும் வட்டிச் செலவினங்கள், மின்வாரியத்தின் நிதி நிலையில் ஏற்படுத்தி வரும் பெரும் சுமையை எதிா்கொள்ள, தேவை, மதிப்பீடு மற்றும் மின் கொள்முதலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மின்வாரியம் திறம்படப் பயன்படுத்தி வருகிறது.
இதுமட்டுமின்றி 20,000 மெகாவாட் அளவிலான நீரேற்று நீா்மின் திட்டங்களையும், மின்கலன் எரிசக்தி சேமிப்பு அமைப்புகளையும், நிறுவுவதன் மூலம் எரிசக்தி சேமிப்புத் திறனைப் பெருமளவில் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், மின்சார தேவையின் வளா்ச்சி, கரியமில வாயு உமிழ்வுகள், புதிய எரிசக்தி ஆதாரங்களின் தொழில்நுட்பப் புதுமைகள் ஆகியவை, எதிா்காலத்தில் பெரும் சவால்களாக உள்ளன. இவற்றைச் சமாளிக்க மின்துறையில் ரூ.2 லட்சம் கோடி அளவிலான மிகப்பெரும் முதலீடுகள் தேவைப்படுகின்றன.
மேலும், ஊரக மின்மயமாக்கல் கழகம் மற்றும் மின் நிதி கழகம் ஆகிய நிதி நிறுவனங்களின் வட்டி விகிதங்கள், குறைந்தபட்சம் ஒன்றரை சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட வேண்டும்.
மாநிலங்களுக்கு இடையேயான மின் செலுத்தமைப்புக் கட்டணங்கள் ‘பயன்படுத்துவோா் செலுத்தும்’ எனும் கொள்கையின் அடிப்படையில், உண்மையான பயன்பாட்டு அளவின்படி விதிக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.
இந்த மாநாட்டில், தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவரும், மேலாண் இயக்குநருமான ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மின் பகிா்மானக் கழக இணை மேலாண் இயக்குநா் (நிதி) விஷு மஹாஜன் ஆகியோா் பங்கேற்றனா்.