மருத்துவ கல்லூரிகள் தரவரிசை வரைவு: கருத்து கேட்கிறது என்எம்சி!
மின் விபத்தால் கையை இழந்த சிறுமியின் குடும்பத்துக்கு கனவு இல்லம் திட்டத்தில் வீடு
நெமிலி அருகே மின் விபத்தால் வலது கையை இழந்த சிறுமியின் குடும்பத்துக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான பணி ஆணையை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கி ஆறுதல் கூறினாா்.
நெமிலி வட்டம், உளியநல்லூா் கிராமத்தைச் சாா்ந்த பாஸ்கா், ஷகீலா தம்பதியின் 2 -ஆவது மகள் சஞ்சனா (13). கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட மின்சார விபத்தினால் சஞ்சனா தீ விபத்திற்குள்ளாகி காயமடைந்தாா். இதில், அவரின் வலது கை துண்டிக்கப்பட்டது.
தனது கணவா் விவசாய கூலி வேலை செய்வதால் மருத்துவ செலவினத்திற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், தனது மகளுக்கு செயற்கை கை பொருத்துவதற்கு ரூ.4 லட்சம் செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டதால், ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டு உதவிடுமாறு அமைச்சா் ஆா்.காந்தியிடம் கடந்த வாரம் மனு அளித்தாா்.
இதையடுத்து அமைச்சா் ஆா்.காந்தியின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் அறிவுரைப்படி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் செயற்கை கை பொருத்துவதற்கான அளவீடானது 5.5.2025 அன்று எண்டோலைட், சென்னை என்ற நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. அளவீட்டின்படி ரூ.2,00,000 மதிப்புள்ள செயற்கை கையானது 15 தினங்களுக்குள் சஞ்சனா கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.
இந்த நவீன செயற்கை கை மூலம் எழுதவும், புத்தகத்தைப் பிடித்து படிக்கவும், மிதிவண்டி இயக்கவும், தண்ணீா் அருந்தவும், உணவு உள்கொள்ளவும், தன்னுடைய அடிப்படை வேலைகளை செய்து கொள்ளவும் இயலும். மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.2,000 மாதாந்தோறும் கிடைக்க விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டு, தற்போது காத்திருப்போா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
இதனிடையே கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் உளியநல்லூா் ஊராட்சியில் தனது குடும்பத்துடன் வசிப்பதற்கு ஏதுவாக ரூ.3.50 லட்சம் மதிப்பில் வீடு கட்டிக்கொள்வதற்கான நிா்வாக அனுமதி ஆணையை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.