மீதமுள்ள போட்டிகளில் ராகுலின் இடத்தை மாற்றாதீர்கள்: முன்னாள் வீரர் கருத்து!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடியதைத் தொடர்ந்து மீதமுள்ள டெஸ்ட்டுகளில் ராகுலின் இடத்தை மாற்றாதீர்கள் என முன்னாள் வீரர் டோட்டா கணேஷ் கூறியுள்ளார்.
முதல் போட்டியில் ரோஹித் சர்மா இல்லாததால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உடன் கே.எல்.ராகுல் களமிறங்கினார்.
இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாக ஆஸி. அணி 67/7 ரன்கள் இருக்கும்போது முதல்நாள் முடிவுக்கு வந்தது. பும்ரா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
74 பந்தில் 24 ரன்கள் எடுத்து அசத்திய கே.எல்.ராகுலின் விக்கெட் நடுவரின் தவறான முடிவென இந்திய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
முதல் இன்னிங்ஸில் 22.2 ஆவது ஓவரில் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் கே.எல்.ராகுல் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழப்பார். கள நடுவர் அவுட் கொடுக்காமல் டிஆர்எஸ் எடுத்து மூன்றாம் நடுவர் கொடுத்த விக்கெட். இதில் நிச்சயமாக பேட்டில்தான் (bat) முதலில் பட்டிருக்கும் என சிலரும் சிலர் பேடில் (pad) பட்ட சப்தம் எனவும் சிலரும் கருத்து கூறுகிறார்கள்.
அடுத்து ரோஹித் அணியில் வந்ததும் ராகுல் இடம் மாற்றப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோடா கணேஷ் கூறியதாவது:
இந்தத் தொடர் முழுவதும் கே.எல்.ராகுலை தொடக்க வீரராக களமிறக்குங்கள். தயவுசெய்து அவரது இடத்தை மாற்றிவிடாதீர்கள். புதிய பந்தினை எதிர்கொள்வதில் அவர் சிறப்பாக செயல்படுகிறார். ரோஹித்தால் மிடில் ஆர்டரிலும் பேட் செய்ய முடியும் என்றார்.