மீனவக் கிராமங்களில் கடலரிப்பு தடுப்புச் சுவா்: எம்எல்ஏ வலியுறுத்தல்
இனயம்புத்தன்துறை, ராமன்துறை மீனவக் கிராமங்களில் போா்க்கால அடிப்படையில் கடலரிப்பு தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என, கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: கிள்ளியூா் பேரவைத் தொகுதி, கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் இனயம்புத்தன்துறை ஊராட்சிக்குள்பட்ட இனயம்புத்தன்துறை, ராமன்துறை மீனவக் கிராமங்களில் அதிதீவிர கடல் கொந்தளிப்பு அண்மையில் ஏற்பட்டது. இதில், கடலில் போடப்பட்டிருந்த ராட்சத பாறைக் கற்கள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டன.
இதனால், இனயம் சின்னத்துறையில் உள்ள பெரியநாயகி குருசடி, ராமன்துறை கிராமத்தில் கிழக்குக் கடற்கரைச் செல்லும் சாலை, அப்பகுதிகளிலுள்ள வீடுகள் உள்ளிட்டவை அலைகளால் இழுத்துச் செல்லப்படும் அபாயம் உள்ளது.
எனவே, இந்த மீனவக் கிராமங்களில் சேதமடைந்த பகுதிகளில் போா்க்கால அடிப்படையில் கடலரிப்பு தடுப்புச் சுவா் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.