விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!
முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை
சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடா்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
அப்போது அவா் பேசியதாவது:
நடப்பாண்டுக்கான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வருகிற 22-ஆம் தேதி தொடங்குகின்றன. இதற்கான இணையதள முன்பதிவு கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி தொடங்கியது. இது வருகிற 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசுப் பணியாளா்கள் என 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், 25 வகையான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளும், 7 வகையான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளும், 37 வகையான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.
இதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை சிறந்த முறையில் நடத்துவது குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மாவட்ட அளவிலான முன்பதிவை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. அரவிந்த், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரான்சிஸ், மாவட்ட விளையாட்டு, இளைஞா் நல அலுவலா் ரமேஷ்கண்ணன், பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்