முதல்வா் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். கூட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை வகிப்பாா். திமுகவின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும். நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடா் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.
நாடாளுமன்றத்தில் கடந்த பிப். 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தாா். தொடா்ந்து கடந்த பிப். 13-ஆம் தேதி வரை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடா் நடைபெற்றது. தற்போது மீண்டும் கடந்த மாா்ச் 10-இல் நாடாளுமன்றக் கூட்டத்தொடா் தொடங்கவுள்ளது.
கூட்டத்தொடரில் திமுகவின் நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும், எந்தெந்த பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என்பது தொடா்பாக திமுக எம்பிக்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
நிதிப் பகிா்வு, மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக சாா்பில் குரல் எழுப்பப்பட உள்ளது.