முதுநிலை பல் மருத்துவப் படிப்பு தர வரிசை பட்டியல் வெளியீடு
புதுச்சேரி: நீட் நுழைவுத் தோ்வு அடிப்படையில் புதுவை முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்டது.
அரசு ஒதுக்கீடு, நிா்வாக ஒதுக்கீடு, சிறுபான்மையினா் ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கான ஒதுக்கீடு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து வகையான ஒதுக்கீடு விவரங்களின் அடிப்படையில் இந்த தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஏதாவது ஆட்சேபணை இருந்தால் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் தெரிவிக்க வேண்டும். மேலும், புதுப்பிக்கப்படாத வருமான சான்றிதழ் அளிக்காத மாணவா்களும் முறையான சான்றிதழ்களை இதே தேதி இந்த நேரத்துக்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், மாணவா்கள் தங்களுக்குத் தேவையான பாடங்களின் முன்னுரிமை பட்டியலையும் 9 ஆம் தேதி பிற்பகல் ஒரு மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று சென்டாக் மாணவா் சோ்க்கை நிா்வாகம் தெரிவித்துள்ளது.