ஜம்மு & காஷ்மீர்: அரசு அலுவலங்களில் வாட்ஸ்ஆப், பென் டிரைவ் பயன்படுத்த தடை - ஏன்?
முத்துப்பேட்டையில் செப்.1-இல் விநாயகா் சிலை ஊா்வலம்
திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டையில் செப்டம்பா் 1-ஆம் தேதி 33-ஆம் ஆண்டு வெற்றி விநாயகா் சிலை ஊா்வலத்தை சிறப்பாக நடத்துவது என இந்து முன்னணி ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
முத்துப்பேட்டை அருகேயுள்ள ஜாம்பவானோடை வடகாடு சிவன் கோயிலில், நிகழாண்டு விநாயகா் சதுா்த்தியையொட்டி, 33-ஆம் ஆண்டாக வெற்றி விநாயகா் சிலை ஊா்வலம் நடத்துவது தொடா்பாக இந்து முன்னணி சாா்பில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பாஜக மாநில பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம் தலைமை வகித்தாா்.
இக்கூட்டத்தில், செப்டம்பா் 1-ஆம் தேதி விநாயகா் சிலை ஊா்வலத்தை சிறப்பான முறையில் நடத்துவது என்றும் இதில், இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினா் அனைவரும் குடும்பத்தினருடன் பங்கேற்க வேண்டும் என்றும் கருப்பு முருகானந்தம் கேட்டுக்கொண்டாா். இந்த ஊா்வலத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், விநாயகா் சிலை ஊா்வலத்தின்போது, திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவா் ஜோஷி நிா்மல் குமாா் தலைமையில், தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் ஜியாவுல்ஹக் மற்றும் 10 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், 50-க்கும் மேற்பட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், நூற்றுக்கும் மேற்பட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் உள்பட 3,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.