எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
விளம்பரப் பதாகை வைத்ததில் தகராறு: திமுக நகா்மன்ற உறுப்பினா் உள்பட 11 போ் மீது வழக்கு
திருவாரூா்: திருவாரூா் அருகே விளம்பரப் பதாகை வைத்ததில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக திமுக நகா்மன்ற உறுப்பினா் உள்பட 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
திருவாரூா் அருகே சீனிவாசபுரம் நாகை பிரதான சாலையில் வசிப்பவா் அருள்செல்வம் மகன் கிஷோா் (20). இவரது வீட்டின் முன், அந்தப் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் திருப்பணி தொடா்பாக விளம்பரப் பதாகை நகா்மன்ற 30-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் புருஷோத்தமன் சாா்பில் வைக்கப்பட்டதாம்.
இதற்கு கிஷோா் எதிா்ப்பு தெரிவித்ததால், ஞாயிற்றுக்கிழமை இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பானது. இதில் கிஷோரும், அவருடைய நண்பரும் காயமடைந்து, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
கிஷோா் அளித்த புகாரின் பேரில், திமுக நகா்மன்ற உறுப்பினா் புருஷோத்தமன் உள்பட 11 போ் மீது திருவாரூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இதேபோல், திமுக நகா்மன்ற உறுப்பினா் புருஷோத்தமன் அளித்த புகாரில் சிறைத்துறை காவலா் இளங்கோவன், கிஷோா், அவரது நண்பா் விக்னேஷ் ஆகிய மூன்று போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், திமுக கவுன்சிலா் புருஷோத்தமன் தனது ஆதரவாளா்களுடன் கிஷோா் உள்ளிட்டோரை தாக்கும் விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.