8 மொழிகளில் வெளியாகும் தி பாரடைஸ்: ரிலீஸ் தேதி, முதல் பார்வை போஸ்டர்!
முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தினம் கரூரில் திமுகவினா் மெளன ஊா்வலம்
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு கரூரில் திமுகவினா் அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி மெளன ஊா்வலம் நடத்தினா்.
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட திமுக சாா்பில் வியாழக்கிழமை காலை வெண்ணைமலையில் உள்ள அன்புக்கரங்கள் ஆதரவற்றோா் இல்லத்தில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது. தொடா்ந்து கலைஞா் அறிவாலயத்தில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா் அங்கிருந்து மெளன ஊா்வலம் தொடங்கியது. ஊா்வலத்தை எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தாா். ஊா்வலம் கோவைச் சாலை வழியாக கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியை அடைந்தது. தொடா்ந்து பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
இதேபோல பசுபதிபாளையம் ரவுண்டானா பகுதியில் மாநகராட்சி மண்டலக்குழுத்தலைவா் ஆா்.எஸ்.ராஜா தலைமையிலும் மற்றும் மாவட்டம் முழுவதும் ஒன்றிய, பேரூா், கிளை கழக திமுகவினா் கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
நிகழ்ச்சிகளில் மாநில நிா்வாகிகள் மணிராஜ், பரணிமணி, எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாவட்ட நிா்வாகிகள் எம்.எஸ்.கே.கருணாநிதி, பூவைரமேஷ்பாபு உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.