மும்பைக்கு 100-ஆவது வெற்றி
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி 2-0 கோல் கணக்கில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை வெள்ளிக்கிழமை வென்றது.
போட்டி வரலாற்றில் மும்பைக்கு இது ஒட்டுமொத்தமாக 100-ஆவது வெற்றியாக இருக்க, ஐஎஸ்எல் கால்பந்தில் இத்தனை வெற்றிகளை பதிவு செய்த ஒரே அணியாக மும்பை உள்ளது.
ஐஎஸ்எல் வரலாற்றில் முதல் முறையாக ஷில்லாங் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், மும்பை அணிக்காக முதலில் பிபின் சிங் தௌனவ்ஜம் 41-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, தொடா்ந்து ஆட்டத்தின் கடைசி தருணத்தில் (90+2’) லாலியன்ஸுவாலா சாங்தே ஸ்கோா் செய்தாா். கடைசி வரை நாா்த்ஈஸ்ட் அணிக்கு கோல் வாய்ப்பு இல்லாமல் போக, மும்பை 2-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இரு அணிகளுமே பிளே-ஆஃப் வாய்ப்புக்கான போட்டியில் இருக்கும் நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் மும்பை 19 ஆட்டங்களில் 31 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்திலும், நாா்த்ஈஸ்ட் 20 ஆட்டங்களில் 29 புள்ளிகளுடன் 5-ஆம் இடத்திலும் உள்ளன.