மும்பை: 85 பேருடன் சென்ற படகு விபத்துக்குள்ளானது! மாயமானோரை தேடும் பணி தீவிரம்
மும்பையில் அரபிக்கடல் பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத்தலமான எலிபேண்டா தீவுக்கு 80 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பெரிய படகின் மீது கடலில் சென்று கொண்டிருந்த சிறிய ரக படகு ஒன்று அதிவேகத்தில் மோதியதில் பயணியர் படகு பலத்த சேதமடைந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினர், படகில் இருந்தவர்களை மீட்கும் பணியில் துரிதகதியில் ஈடுபட்டனர். மீட்புப்பணியில் இந்திய கடற்படையின் 11 படகுகளும் கடலோர காவல்துறையின் 3 படகுகளும் கடலோரக் காவல்படையின் ஒரு படகும் ஈடுபட்டுள்ளது. 4 ஹெலிகாப்டர்களும் வரவழைக்கப்பட்டு மீட்புப்பணி முடுக்கி விடப்பட்டது. அவர்களுடன் அப்பகுதியில் உள்ள மீனவர்களும் இணைந்து பயணிகளை மீட்டனர்.
கடலோர காவல்படையின் சிறிய ரக ரோந்துப்படகு ஒன்று படுவேகத்தில் சென்று பயணியர் படகை முட்டியதே விபத்துக்கான காரணம் எனப்படுகிறது. இது குறித்த விரிவான விசாரணை நடைபெறுகிறது.
விபத்துக்குள்ளான படகில் 85 பேர் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் இதுவரை 80 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மாயமான 5 பேரை தேடும் பணியில் இந்திய கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மருத்துவமனைகளில் அனுமத்திக்கப்பட்டுள்ள 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.