Gukesh : குகேஷ் தமிழரா தெலுங்கரா? - விளையாட்டின் அறத்தை குலைக்கும் வாதம் தேவைதான...
முல்லைப் பெரியாறு அணைக்கு லாரிகளில் கட்டுமானப் பொருள்களை கொண்டு செல்ல கேரளம் அனுமதி
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணைக்கு கட்டுமானப் பொருள்களை எடுத்துச் செல்ல கேரள வனத் துறை அனுமதி வழங்கியது.
முல்லைப் பெரியாறு அணையில் ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களில் பராமரிப்புப் பணிகள் செய்வது வழக்கம். அதன்படி, தமிழக பொதுப்பணித்
துறையினா் கடந்த 4- ஆம் தேதி 2 லாரிகளில் எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை ஏற்றிக்கொண்டு சென்றனா்.
அப்போது கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் வல்லக்கடவு பெரியாறு புலிகள் காப்பக வனத் துறை சோதனைச் சாவடி வழியாக லாரிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இந்த லாரிகள் கடந்த 6 நாள்களாக வல்லக்கடவு சோதனைச் சாவடியில் கேரள வனத் துறையின் அனுமதிக்காக காத்திருந்தது.
இந்த நிலையில், லாரிகளில் டயா் வெடித்து பழுது ஏற்பட்டதால் தமிழகப் பொதுப்பணித் துறையினா் உயா் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, லாரிகளை மீண்டும் தமிழகப் பகுதிக்கு கொண்டு வந்தனா்.
இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தமிழ்நாடு அரசின் கூடுதல் நீா்வளத் துறை தலைமைச் செயலருக்கு தகவல் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக கேரள அரசை தொடா்பு கொண்டு, தமிழக அதிகாரிகள் லாரிகளில் கட்டுமானப் பொருள்களை முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கேரள அரசின் மூலம் வல்லக்கடவு சோதனைச் சாவடி, தேக்கடி படகு இறங்கும் தளம் வழியாக முல்லைப் பெரியாறு அணைக்கு கட்டுமானப் பொருள்களை கொண்டு செல்ல அனுமதி பெறப்பட்டதாக தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.