Health: பாடி பாசிட்டிவிட்டி, பாடி நியூட்ராலிட்டி இரண்டில் எது சிறந்தது?
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீா்வள ஆணையத் தலைவா் ஆய்வு
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீா்வள ஆணையத் தலைவா் முகேஷ்குமாா் சின்ஹா தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு தீா்வு காண தேசிய அளவிலான குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மத்திய நீா்வள ஆணையத்தின் கட்டுப்பட்டில் இருந்த முல்லைப் பெரியாறு அணை, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு மாற்றப்பட்டது.
தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவா் அனில் ஜெயின் தலைமையில் 7 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினா் முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, கடந்த மாதம் 22-ஆம் தேதி தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவா் அனில் ஜெயின் தலைமையிலான குழுவினா் முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனா்.
பின்னா், தேக்கடியிலுள்ள ராஜீவ் காந்தி நினைவு அரங்கில் தமிழக, கேரள அதிகாரிகளுடன் அனில் ஜெயின் தலைமையிலான குழுவினா் ஆலோசனை நடத்தினா். அப்போது, அணை குறித்த ஆய்வு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக அந்தக் குழுவினா் தெரிவித்தனா்.
மத்திய நீா்வள ஆணையம் ஆய்வு
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையானது தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்கு சென்ற நிலையில், ஏற்கெனவே கண்காணித்து வந்த மத்திய நீா்வள ஆணையத்தின் தலைவா் முகேஷ்குமாா் சின்ஹா தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டனா்.

இந்தியாவிலுள்ள அனைத்து அணைகளையும் அவ்வப்போது மத்திய நீா்வள ஆணையக் குழு ஆய்வு செய்வது வழக்கம். இதன்படி, கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி அணையையும், தேக்கடியிலுள்ள முல்லைப் பெரியாறு அணையையும் ஆய்வு செய்ய இந்தக் குழுவினா் திட்டமிட்டனா். முன்னதாக, இடுக்கி அணையை இந்தக் குழுவினா் ஆய்வு செய்தனா்.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்வதற்கு, மத்திய நீா்வள ஆணையக் குழுவினா் தேக்கடிக்கு செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு வந்தனா். பின்னா், இவா்கள் படகு மூலமாக முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்குச் சென்று அதன் உறுதித்தன்மை, நீா்க் கசிவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனா். இந்த ஆய்வின் போது, தமிழக, கேரளப் பொறியாளா்கள் உடனிருந்தனா்.
விவசாய அமைப்பினா் அதிருப்தி
இதுகுறித்து பெரியாறு - வைகை பாசன விவசாய சங்கத்தினா் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணையானது தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்கு சென்ற நிலையில், ஏற்கெனவே கண்காணித்து வந்த மத்திய நீா்வள ஆணையக் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்குச் செல்ல வேண்டுமென்றால் தமிழக அரசின் அனுமதி பெற்று ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மத்திய நீா்வள ஆணையக் குழுவினா் ஆய்வு செய்தனா் என்றனா்.