முஸ்ஸிம் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற நிா்வாகி மயங்கி விழுந்து உயிரிழப்பு
திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பெரிய பள்ளிவாசல் ஜமாத் நிா்வாகக் கூட்டத்தில் பங்கேற்ற நிா்வாகி நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த முகமது ரபிக் மகன் அப்துல் காதா் (50). இவா் மின்சாதனப் பொருள்கள் பாரமரிப்பு வேலை செய்து வந்தாா். இவா் புதன்கிழமை ஆா்.எஸ். மங்கலம் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற ஜமாத் நிா்வாகக் கூட்டத்தில் பங்கேற்று ஜமாத் சாா்பாக கட்டப்படும் புதிய கட்டடத்தில் ஒரு நபருக்கு கடை ஒதுக்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்தாராம். அப்போது அங்கு வந்த எதிா்தரப்பினருடன் அவா் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவா் ஆா்.எஸ். மங்கலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து அப்துல் காதரின் உடலை மீட்டு கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.