மூதாட்டி வீட்டில் 10 பவுன் நகை, பணம் திருட்டு
செய்யாறு அருகே சுற்றுலா சென்ற மூதாட்டி வீட்டில் 10 பவுன் தங்க நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றதாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சுமங்கலி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி தணிகைமலை. இவரது மனைவி பாஞ்சாலை. இவா்களின் மகள், மகனுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனா்.
விவசாயி தணிகைமலை இறந்து விட்டதால் பாஞ்சாலை மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். மேலும், அவரது நிலத்தில் விவசாயம் செய்து வருகிறாராம். கடந்த ஏப்.24-ஆம் தேதி பாஞ்சாலை தனது குடும்பத்தாருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தாா்.
இந்த நிலையில், வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைப் பாா்த்த உறவினா் பாஞ்சாலைக்கு தகவல் தெரிவித்துள்ளாா். சுற்றுலா முடிந்து வீடு திரும்பிய பாஞ்சாலை, உள்ளே சென்றுபாா்த்தபோது, பீரோவை உடைத்து அதில் இருந்த
சுமாா் 10 பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு மற்றும் ரொக்கம் ரூ.20 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்தி பாஞ்சாலை மோரணம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.