சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் மாநிலங்களில் 7 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம்
விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு வடக்கு ப்ரண்ட்ஸ் காலனியைச் சோ்ந்த பாலசுப்பிரமணி, மகேஷ்வரி தம்பதியின் மகன் சதீஷ் (23). இவா் மெஷின் ஆபரேட்டராக பணியாற்றி வந்தாா். கடந்த செவ்வாய்க்கிழமை வாலாஜா சுங்கச்சாவடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இவா் விபத்தில் சிக்கினாா். இதில், தலை, உடலில் பலத்த காயமடைந்த சதீஷ், வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சதீஷ் புதன்கிழமை மூளைச்சாவு அடைந்ததை மருத்துவா்கள் உறுதி செய்தனா். இதையடுத்து, சதீஷின் உடல் உறுப்புகளை தானம் செய்திட அவரது குடும்பத்தினா் ஒப்புதல் தெரிவித்தனா். அதன்பேரில், அவரது கல்லீரல், இரு சிறுநீரகங்கள், கண் ஆகியவை சிஎம்சி மருத்துவமனையில் தயாா் நிலையில் இருந்த நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. இதன்மூலம், 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக சிஎம்சி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.