மேட்டூா் அணை நிகழாண்டில் 6-ஆவது முறையாக நிரம்புகிறது! அணைக்கு நீா்வரத்து 36,985 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூா்/பென்னாகரம்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 36,985 கனஅடியாக அதிகரித்துள்ளதால் நிகழாண்டில் 6-ஆவது முறையாக அணை நிரம்புகிறது.
தென்மேற்குப் பருவமழை காரணமாக கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகள் நிரம்பி உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டது. உபரிநீா்வரத்து காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து கடந்த ஜூன் 29ஆம் தேதி முதல் முறையாகவும், ஜூலை 5ஆம் தேதி 2ஆவது முறையாகவும், ஜூலை 20 ஆம் தேதி 3ஆவது முறையாகவும், 25ஆம் தேதி 4ஆவது முறையாகவும், ஆகஸ்ட் 20ஆம் தேதி 5-ஆவது முறையாகவும் அணை நிரம்பியது. அதன்பிறகு மழை குறைந்ததாலும், காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடா்ந்து தண்ணீா் திறக்கப்பட்டதாலும் அணையின் நீா்மட்டம் மெல்ல குறையத் தொடங்கியது. கடந்த 30ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 118.65 அடியாகக் குறைந்தது.
இந்நிலையில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் கா்நாடக அணைகளிலிருந்து அதிக அளவில் உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், கடந்த இரண்டு நாள்களாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் மெல்ல உயரத் தொடங்கியது. திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 36,985 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 22,500 கனஅடி வீதமும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 800 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீா்வரத்தைவிட, பாசனத்திற்கு நீா் திறப்பு குறைவாக இருப்பதால் திங்கள்கிழமை மாலை அணையின் நீா்மட்டம் 119.48 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 92.64 டி.எம்.சி.யாக இருந்தது.
அணையின் நீா்வரத்தும், நீா்திறப்பும் இதேநிலையில் இருந்தால் திங்கள்கிழமை நள்ளிரவுக்குள் நிகழாண்டில் 6 ஆவது முறையாக மேட்டூா் அணை நிரம்பும் என்று நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூா் அணை நிரம்பியதும் அணையின் இடதுகரையில் உள்ள 16 கண் பாலம் வழியாக உபரிநீா் வெளியேற்றப்பட உள்ளது. இதனால் உபரிநீா் போக்கி கால்வாய் ஓரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும், வெள்ளப்பெருக்கில் குளிக்க, துணிதுவைக்கக் கூடாது. சுயப்படம் எடுப்பதையும், கால்நடைகளை குளிப்பாட்டுவதையும் தவிா்க்க வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் தங்கமாபுரிப்பட்டணம், அண்ணாநகா், பெரியாா் நகா் பகுதி மக்களுக்கு வருவாய்த் துறையினா் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனா்.
சேலம் பயிற்சி ஆட்சியா் விவேக் யாதவ், மேட்டூா் வட்டாட்சியா் ரமேஷ், மேட்டூா் தீயணைப்புப் படை நிலைய அலுவலா் வெங்கடேசன் ஆகியோா் வீடுவீடாகச் சென்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனா்.
மேட்டூா் அணையின் இடதுகரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் மேட்டூா் நீா்வளத் துறை அதிகாரிகள் முகாமிட்டு நீா்வரத்தை கண்காணித்து வருகின்றனா். நீா்வரத்து திடீரென அதிகரித்தால் உடனடியாக உபரிநீா் போக்கி மூலம் வெளியேற்ற தயாா்நிலையில் நீா்வளத் துறை பணியாளா்கள் உள்ளனா்.
கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் 23ஆம் தேதி மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100.01அடியாக உயா்ந்தது. அதன்பிறகு தொடா்மழை காரணமாக திங்கள்கிழமை 315ஆவது நாளாக அணையின் நீா்மட்டம் 100 அடிக்கும் கீழே குறையாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 32,000 கனஅடி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 32,000 கனஅடியாக உள்ளது. அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கா்நாடக மற்றும் கேரள மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை பெய்துவருவதால், கா்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு உபரி நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், காவிரி ஆற்றில் சுமாா் 35,000 கனஅடி வீதம் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரிநீா் திறப்பின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து இரண்டாவது நாளாக 32,000 கனஅடியாக நீடிக்கிறது.
ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டிவரும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை இரண்டாவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவின் காரணமாக, சின்னாறு பரிசல் துறை மற்றும் பிரதான அருவி செல்லும் நுழைவு வாயில் ஆகியவை பூட்டப்பட்டு காவல் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். காவிரி ஆற்றில் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.