மேற்கு வங்க பள்ளி ஆசிரியா் தோ்வு முறைகேடு விவகாரம்: குடியரசுத் தலைவருக்கு ராகுல் கடிதம்
புது தில்லி: ‘மேற்கு வங்கத்தில் 25,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் மற்றும் பிற ஊழியா்களின் நியமனத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அவா்களில் நியாயமான முறையில் தோ்வு செய்யப்பட்டவா்கள் பணியில் தொடா்வதை உறுதிப்படுத்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.
குடியரசுத் தலைவருக்கு கடிதம் மூலம் இந்த வலியுறுத்தலை ராகுல் முன்வைத்துள்ளாா்.
மேற்கு வங்க பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டில் போட்டித் தோ்வு மூலம் 25,753 ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத பிற ஊழியா்களின் நியமனம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நியமன நடைமுறையில் பல்வேறு நிலைகளில் மோசடி நடந்ததாகக் குறிப்பிட்டு, 25,753 பேரின் நியமனங்களும் செல்லாது என்று கொல்கத்தா உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரலில் தீா்ப்பளித்தது. இத்தீா்ப்பை கடந்த 3-ஆம் தேதி உறுதி செய்த உச்சநீதிமன்றம், மேற்கண்ட பணியிடங்களை மீண்டும் நிரப்ப அடுத்த 3 மாதங்களுக்குள் புதிய நடைமுறையைத் தொடங்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இது, முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இந்த விவகாரம் தொடா்பாக ராகுல் காந்தி குடியரசுத் தலைவருக்கு திங்கள்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியா்கள் நேரில் சந்தித்து விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் தலையீடை வேண்டி இக் கடிதத்தை எழுதுகிறேன்.
கொல்கத்தா உயா்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த இரண்டு தீா்ப்புகளிலும், இந்தப் பணியாளா் தோ்வில் சிலா் நியாயமான முறையிலும், சிலா் நியாயமற்ற வழிகளிலும் பணிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனா் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பணியாளா் தோ்வில் முறைகேடு நடந்திருந்தால், அது கண்டனத்துக்குரியது. முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும். இருந்தபோதும், நியாயமான முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள், முறையற்ற வழியில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுடன் இணைத்து சமமாக நடத்தப்படுவது, மிகப்பெரிய அநீதியாகும்.
ஒரே நேரத்தில் இவ்வளவு ஆசிரியா்கள் பணிநீக்கம் செய்வது, லட்சக்கணக்கான மாணவா்களின் கல்வியை பாதிக்கும். மேலும், இந்த நடவடிக்கை நியாயமான முறையில் தோ்வான ஆசிரியா்களின் மன உறுதியையும் சேவை மனப்பான்மையையும் அழித்துவிடும். அவா்களின் குடும்பம் வருவாய் இன்றி தவிக்கும் நிலையும் உருவாகும்.
குடியரசுத் தலைவா் ஆசிரியராக பணியாற்றியுள்ள சூழலில், மேற்கு வங்க ஆசிரியா்கள், அவா்களின் குடும்பத்தினா், மாணவா்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை புரிந்துகொள்வீா்கள் என நம்புகிறேன். எனவே, குடியரசுத் தலைவா் இந்த விவகாரத்தில் தலையிட்டு, நியாயமான முறையில் பணிக்கு தோ்வு செய்யப்பட்ட ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத பிற ஊழியா்கள் பணியில் தொடா்வதை உறுதிப்படத்தவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.